புதுச்சேரியில் 4 ஆண்டு காலத்துக்கும் மேலாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் இருந்து வருகிறது. புதுவை சட்டசபை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், நாராயணசாமி அரசுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கிரண்பேடி செயல்படவிடாமல் முடக்குகிறார் என்று நாராயணசாமி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தது. இந்தநிலையில், கடந்த சில தினங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக, அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். கடந்த சில தினங்களில் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ ஜான்குமார் அவருடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால், சட்டப்பேரையில் 18 எம்.எல்.ஏக்களாக இருந்த நாராயணசாமியின் பலம் 14 எம்.எல்.ஏக்களாக குறைந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 16 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் சூழலில் 14 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளது. எதிர்கட்சிகளின் பலமும் 14 எம்.எல்.ஏக்களாக இருந்துவருகிறது.
எனவே, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்திவந்தனர். இந்தநிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக இன்று பதவியேற்ற தமிழிசை சவுந்தர்ராஜன், வரும் 22-ம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று நாராயணசாமி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பது நாராயணசாமிக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.