தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம்

சோனியா காந்தி

கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

 • Share this:
  கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 2.34 லட்சத்தை கடந்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45-ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசித்த பின் சோனியா காந்தி பிரதமருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

  அதில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து செய்திகள் வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சில மாநிலங்களில் இன்னும் சில தினங்களுக்குத்தான் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

  பிரதமருடன் மாநில முதல்வர்கள் ஆலோசித்த போது இதனைதான் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அரசாங்கம் தரப்பில் அமைதி நிலவுகிறது. இதுபோன்ற சமயத்தில் எதிர்க்கட்சியின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு செவிசாய்க்காமல், அந்த ஆலோசனைகளை வழங்கியதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்.

  இந்திய அரசு ஏற்கனவே சுமார் 6.5 கோடி வரை தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. நமது சொந்த நாட்டில் உலகில் மிக அதிகமான தொற்று வீதத்தைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தி, நமது குடிமக்களைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டாமா? நமது மக்கள் தினமும் ஆயிரக்கணக்கில் இறந்து கொண்டிருக்கும் போது, மற்ற நாடுகளுக்கான நமது தாராள மனப்பான்மையை பற்றி எப்படி பெருமை பேசுவது? இந்த சமயத்திலும் அரசு தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தொடர்ந்து கூறி வருகிறது.

  இளைஞர்களும் தீவிர உடல் நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45-ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும். மேலும் ஆஸ்துமா, ஆஞ்சினா, நீரிழிவு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் மற்றும் பிற ஒத்த நோய்கள் போன்ற ஆபத்தான சுகாதார கோளாறுகள் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும், தடுப்பூசி அளிக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: