உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, ஒரு இளைஞர் அங்கிருந்து பாதுகாவலர்களை ஆயுதத்தில் தாக்கி கோயிலுக்குள் நுழைய முற்பட்டார். இந்த தாக்குதலில் இரு காவலர்கள் காயமடைந்த நிலையில், மற்ற பாதுகாவலர்கள் அந்த நபரை கைது செய்து விசாரித்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் முர்டாசா அப்பாஸி எனவும் இவர் ஐஐடி பட்டதாரி எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இவர் தாக்குதல் நடத்திய கோயிலைத் தான் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத் நிர்வகித்து வருகிறார் என்ற நிலையில், அந்நபர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள தொடங்கியது.
விசாரணையில் கிடைத்த தகவலில், கோரக்நாத் கோயிலில் காவலர்களை தாக்கிய நபரை உத்தரப் பிரதேசத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், இவருக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு நிதியுதவி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருக்கும் இவர், மற்றொரு ஐஎஸ் ஆதரவாளரான மெஹ்ந்தி மசூத் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். தனது வங்கிக் கணக்கில் இருந்து இதுவரை ரூ.8.5 லட்சம் தொகையை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு இவர் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க:
இந்தியாவின் புதிய தளபதி... லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பதவியேற்பு
மேலும், இவர் இன்டெர்நெட்டில் ஏகே-47 ரக துப்பாக்கி, ஏவுகணை தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான கட்டுரைகளை அதிகம் படித்து, துப்பாக்கிச் சுட பயிற்சி எடுத்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.