நீட் தேர்வு ஒத்திவைப்பு - அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவிப்பு

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  எம்.டி, எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருந்தது. இந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 6 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மற்ற மாநிலங்களுக்குப் போய் எழுத வேண்டி இருந்தது.

  கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நடத்துவதால் மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அதிருப்தி நிலவியது.

  இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பிரதமர் அலுவகத்தை ட்விட்டரில் டேக் செய்து, கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டிருக்க, மருத்துவர்களும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்க, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்த இது சரியான நேரமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

  இந்நிலையில், ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏப்.18ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைத்துள்ளது. இளம் மருத்துவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் சூழ்நிலைகளை பொறுத்து முதுநிலை நீட் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: