முகப்பு /செய்தி /இந்தியா / ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவா மருத்துவமனையில் விபரீதம்: 4 நாட்களில் 74 பேர் பலி!

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவா மருத்துவமனையில் விபரீதம்: 4 நாட்களில் 74 பேர் பலி!

ஆக்ஸிஜன் பற்றாக்குறை

ஆக்ஸிஜன் பற்றாக்குறை

நாட்டிலேயே அதிகபட்சமாக கோவாவில் கொரோனா பாஸிட்டிவிட்டி ரேட் 48.1% ஆக உள்ளது.

  • Last Updated :

கொரோனா தொற்று பாதிப்பு நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் அதிகரித்துள்ளது. தமிழகம் உட்பட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் சுற்றுலா சொர்க்கபுரியான கோவா மாநிலம் தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. கோவா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் அளவில் சரிக்கு சமமாக கொரோனாவால் பாதிக்கப்படுப்வர்களின் எண்ணிக்கை உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கோவாவில் கொரோனா பாஸிட்டிவிட்டி ரேட் 48.1% ஆக உள்ளது. அப்படியென்றால் அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் இருவரின் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என அர்த்தம்..

தலைநகர் பனாஜியில் அமைந்துள்ள கோவாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக விளங்கும் கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 74 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 26 பேரும், புதனன்று 20 பேரும், நேற்று 15 பேரும், இன்று காலை 13 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த வாரம் அந்த மருத்துவமனைக்கு சென்ற கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், அம்மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை எனவும் ஆக்ஸிஜன் சப்ளையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையே கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அங்கு படுக்கைகள் இல்லாததால் வராண்டாவிலும், ஸ்டோர் ரூம்களிலும் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை சரிவர கையாளவில்லை என பல்வேறு வழக்குகளும் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளையில் தொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் இல்லாமல் யாரும் உயிரிழக்கும் சூழல் இனி இருக்கக்கூடாது என நேற்று தான் நீதிமன்றம் தெரிவித்தது,

Read More:  மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின் போது ஆண் செவிலியரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்!

இதனிடையே அம்மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை குறித்து விசாரித்து அறிக்கை தருவதற்காக 3 பேர் கொண்ட குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. இக்குழு 3 நாட்களில் தனது விசாரணை அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    கோவா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,491 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 33,000ஐ நெருங்கியது. ஒட்டுமொத்த அளவில் பலி எண்ணிக்கையும் 2,000ஐ நெருங்கியுள்ளது.

    First published:

    Tags: COVID-19 Second Wave, Goa, Oxygen