கோவா சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரவரி கோமந்தக் பார்ட்டியுடன் (எம்.ஜி.பி.) கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு உறுப்பினர்கள் 27 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக மாநில கட்சிகளாக கருதப்படும் ஆம் ஆத்மியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசும், கோவா சட்டமன்ற தேர்தல் களத்தில் குதித்துள்ளன.
மாநில கட்சிகளின் வருகை, கோவாவில் பாஜகவுக்கு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, எம்.ஜி.பி கட்சியுடன் இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Also Read : பெண்களுக்கு ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படும்... அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி
இதுதொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோவா சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.பி. கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் லூசின்கோ பலெய்ரோ, கோவா மாநில திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மகுவா மொய்த்ரா ஆகியோர் எம்.ஜி.பி கட்சியின் தலைவர் தீபக் தவாலிகரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் அடிப்படையில் இரு கட்சிகளுக்கும் இடையே அதிகாரப் பூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா சட்டமன்ற தேர்தல் களத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சற்று தீவிரமாக செயலாற்றி வருகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் லூசின்கோ பலெய்ரோ, திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்த பின்னர், அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது.
Also Read : 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி' : முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பு
சமீபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்துள்ளதால், அக்கட்சியினர் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
இன்னொருபுறம் ஆம் ஆத்மி கட்சியும் மக்களை ஈர்க்கும் விதமான, தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. பெண்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Goa, Mahua Moitra, Mamata banerjee