பிரார்த்தனைகள் வீணானது...! மாயமான 6 வயது சிறுமி சடலமாக மீட்பு

பிரார்த்தனைகள் வீணானது...! மாயமான 6 வயது சிறுமி சடலமாக மீட்பு
  • News18
  • Last Updated: February 29, 2020, 4:07 PM IST
  • Share this:
கேரளாவில் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி, அருகாமையில் உள்ள ஆற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கண்ண நல்லூர் அருகே உள்ள இளவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீப் குமார் - தன்யா தம்பதி. இவர்களுக்கு, 6 வயதில் தேவநந்தா என்ற மகளும் 3 மாத கைக்குழந்தை ஒன்றும் இருந்தது.

வியாழக்கிழமை காலை துணி துவைப்பதற்காக அருகில் உள்ள ஆற்றிற்கு தன்யா சென்றுள்ளார். வீட்டிற்குள் குழந்தையுடன் சிறுமி வேதநந்தா விளையாடி கொண்டிருந்துள்ளார். வீட்டிற்குள் திரும்பி வந்த போது சிறுமி தேவநந்தா வீட்டில் இல்லை.


தனியாக வெளியே செல்லும் பழக்கம் இல்லாத சிறுமி எங்கே சென்றார் என அக்கம் பக்கம் தாய் தன்யா தேடியுள்ளார்.  அக்கம்பக்கத்தினர், ஊர்மக்கள் சேர்ந்து சிறுமியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து கொல்லம் காவல் ஆணையர் உத்தரவிட்டார். குழந்தை கடத்தல் கும்பல் யாராவது சிறுமியை கடத்தினார்களா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.அருகில் உள்ள ஆற்றில் மூழ்கி காணாமல் போனாரா என்ற சந்தேகத்தில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அருகாமையில் உள்ள ஆற்றில் விடிய விடிய தேடினர்.

மேலும் காவல்துறை சார்பில் குழந்தையை காணவில்லை என்று தொடர்பு எண்ணுடன் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினர். தகவல் தெரிந்த மக்கள் குழந்தையை மீட்க பிரார்த்தனை செய்ததுடன் விடிய விடிய பல பகுதிகளில் தேடியும் வந்தனர். சாதாரண மக்கள் தொடங்கி திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள் வரை அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அருகில் உள்ள பள்ளிமண் ஆற்றில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுமியின் உடலை இறந்த நிலையில் மீட்டனர்.

சிறுமியின் உடலைப்பார்த்து அவரது தாய் கதறி அழுதார். எப்படியும் உயிருடன் குழந்தையை மீட்டுவிட விடிய விடிய தேடிய அப்பகுதி மக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசினரா என விசாரித்து வருகின்றனர்.

நீரில் மூழ்கியே சிறுமி உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் கூறுகின்றன. எனினும், போலீசார் விசாரணை தொடர்கிறது.

மேலும், அப்பகுதியில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிப்பதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி, ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading