இந்தியாவில் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது!

புதிய வகை கொரோனா வைரஸ்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களிடம் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை "double mutant variant" என்று மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது.

  • Share this:
இந்தியாவில் 18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கம் வரை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா பரவல் தற்போது அசுர வேகத்தில் தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம், பஞ்சாப், கேரளா, குஜராத், டெல்லி என பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இன்று 47,262 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்திற்கு பின்னர் மிக உயர்ந்த ஒற்றை நாள் உயர்வு ஆகும், இதன் மூலம் நாடு தழுவிய அளவில் கொரோனா பாதிப்பு 1.17 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களிடம் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை "double mutant variant" என்று மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது.

உள்நாட்டு மாதிரிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்து மரபணு வரிசைமுறைகளை மேற்கொண்டு வரும் ஜெனோமிக்ஸ் குறித்த இந்திய SARS-CoV-2 கூட்டமைப்பு (INSACOG) அமைப்பு (10 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய அமைப்பு) இந்த "double mutant variant"-ஐ கண்டறிந்துள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதற்கு காரணம் double mutant variant தான் என்று நிரூபிக்க தேவையான எண்ணிக்கையில் இவை கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தவிர 736 மாதிரிகளில் பிரிட்டன் வகை கொரோனாவும், 34 பேரிடம் தென் ஆப்பிரிக்க வகை கொரோனாவும், ஒருவரிடம் பிரேசில் வகை கொரோனா வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் ஹோலி, பிஹூ, ஈஸ்டர், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொண்டாடுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Published by:Arun
First published: