Home /News /national /

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு

பிபின் ராவத்

பிபின் ராவத்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் டெல்லியில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு டெல்லியில் இன்று மாலை 4 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குன்னூர் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை நண்பகல் ஆம்புலன்ஸ் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மூலம் அனைத்து உடல்களும் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு இரவு 7.45 மணியளவில் கொண்டு வரப்பட்டன. விமானத்தில் இருந்து அவர்களின் உடல்களை ராணுவ வீரர்கள் இறக்கி விமான நிலைய வளாகத்தில் ஒரு இடத்தில் அஞ்சலிக்காக வரிசையாக வைத்தனர். உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மூவர்ண கொடி போர்ததப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இறந்த வீரர்களின் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு முப்படைத் தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். ராணுவ தளபதி நரவனே, கடற்படைத் தளபதி ஹரிகுமார் மற்றும் விமானப்படை தளபதி விஆர் சௌத்ரி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதேபோல, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்துகிறார். மேலும் மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    பிபின் ராவத்தின் இல்லத்தில் காலை 11 மணி முதல் 12. 30 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

    இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அனைத்து கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Army Chief General Bipin Rawat

    அடுத்த செய்தி