"செய்யும் தொழிலே தெய்வம்" என்பார்கள். அதாவது நாம் செய்யும் வேலையை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும் என்பதே அதன் அர்த்தம். அதே சமயம், செய்யும் தொழிலுக்கு ஏற்ற குணத்தோடு இருக்கின்ற இரண்டு மாமனிதர்கள் குறித்து தான் இந்தச் செய்தியில் பார்க்க இருக்கிறோம்.
ஆம், கண் எதிரே கிடந்த பையில் நிறைய பணமும், நகைகளும் இருந்திருக்கின்றன. அவற்றைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளர்கள் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். சுற்றுப்புறத்தை மட்டுமல்ல, மனதையும் இவர்கள் எப்போதுமே தூய்மையாக வைத்திருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது.
எங்கு நடந்த சம்பவம்
மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகே உள்ள யுரான் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் அஸ்ரஃப் அஸ்கர் ஷேக் மற்றும் அமித் லால்ஜி சௌத்ரி ஆவர். இவர்கள் இருவரும் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல பணி செய்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் பை ஒன்று கிடந்ததை பார்த்தனர்.
ALSO READ | பற்றி எரியும் நெருப்பில் திருமண விழா - மாஸ் காட்டிய ஹாலிவுட் தம்பதியின் சாகசம்..
அந்தப் பையை எடுத்து பார்த்தபோது, அதில் தங்க தாலி, ஒரு மொபைல் ஃபோன் மற்றும் கொஞ்சம் பணம் ஆகியவை இருந்திருக்கிறது. எப்படியும் இந்தப் பையை தொலைத்துவிட்டு யாரோ ஒருவர் வேதனையோடு இருப்பார் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றியது. உடனடியாக, பையின் உரிமையாளரைக் கண்டறிந்து ஒப்படைக்குமாறு கூறி, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவம் நடந்தது எப்படி
நவி மும்பை பகுதியைச் சேர்ந்த சுஷாலி தனஞ்செய் நக்வா என்ற பெண்ணின் 10 வயது மகளுக்கு கடந்த மே 7-ஆம் தேதி உடல்நிலை சரியில்லை. சுஷாலி ஒரு மீன் வியாபாரி ஆவார். அவரும், அவரது கணவரும் சேர்ந்து மகளின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் திரட்டிக் கொண்டிருந்தனர். இதற்காக, 35 கிராம் எடையுள்ள தாலிச் சங்கிலியை நகைக்கடையில் விற்று பணம் பெற முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து, கையில் இருந்த பணம், மொபைல் ஃபோன் ஆகியவற்றோடு, விற்பனைக்கான தாலிச் சங்கிலியையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பை தவறி கீழே விழுந்து விட்டது.
ALSO READ | தபால் பெட்டிகள் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
அந்த பை தான் தூய்மைப் பணியாளர்களான அஷ்ரஃப் (18 வயது) மற்றும் அமித் (23 வயது) ஆகியோரின் கண்களில் தென்பட்டிருக்கிறது. வழக்கம்போல குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த இவர்கள் இருவரும், பையை கண்டெடுத்தவுடன் அதை யுரான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
பையில் இருந்து மொபைல் ஃபோனை வைத்து, அதன் உரிமையாளர் யார் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் பணம், நகை உள்ளிட்ட அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது.
பையில் இருந்த பணமும், நகையும் தூய்மைப் பணியாளர்களான தங்கள் வசதிக்கு மிகப் பெரியது என்பது அஷ்ரஃப் மற்றும் அமித் ஆகியோருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், மனதில் நேர்மையும், கருணையும் இருந்த காரணத்தால் உரியவர்களிடம் அதை கொண்டு சேர்த்து விட்டனர். சமூக ஊடகங்களில் பலரும் இவர்களை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.