ஹோம் /நியூஸ் /இந்தியா /

தென்ஆப்பிரிக்கா போராட்டம் முதல் இந்திய சுதந்திர போராட்டம் வரை! மஹாத்மா காந்தியின் 150 நிகழ்வுகள்

தென்ஆப்பிரிக்கா போராட்டம் முதல் இந்திய சுதந்திர போராட்டம் வரை! மஹாத்மா காந்தியின் 150 நிகழ்வுகள்

காந்தி

காந்தி

காந்தியின் மறைவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ”காந்திஸ்தான்” என்று பெயர் வைக்கவேண்டும் என்றார் பெரியார்.

  • News18
  • 8 minute read
  • Last Updated :

1. 1869 அக்டோபர் 2 அன்று குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

2. மோகன்தாஸ் காந்தியின் தந்தையார், கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. தாயார், புத்லிபாய்.

3. காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி போர்பந்தர் சமஸ்தானத்து திவானாக இருந்தவர்.

4. போர்பந்தரில் ஆரம்பக்கல்வியையும் ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வியையும் படித்தார் காந்தி.

காந்தி

5. காந்திக்கு 7 வயதானபோது அவருக்கு அதே ஊரைச் சேர்ந்த கஸ்தூரிபாயுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

6. நிச்சயதார்த்தம் நடந்து 6 ஆண்டுகள் கழித்தே காந்தி – கஸ்தூரிபாய் இருவருக்கும் பால்ய திருமணம் நடந்தது.

7. காந்தி தன்னுடைய மனைவி கஸ்தூரி பாயைவிட சற்றேறக்குறைய ஒரு வயது இளையவர்.

8. தன் மகனை திவானாக்க விரும்பிய கரம்சந்த் காந்தி 1885ல் திடீரென மரணம் அடைந்துவிட்டார்.

9. தந்தை இல்லாத இடத்தில் காந்தியே குடும்பத்தலைவனாகச் செயல்படவேண்டிய கட்டாயம் உருவானது.

10. காந்திக்கு ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவ்தாஸ் என மொத்தம் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன.

11. 1887-ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்ற காந்தி, சாமளாதாஸ் கல்லூரியில் சேர்ந்துகொண்டார்.

12. உண்மையில், கல்லூரியில் படித்தபோது காந்தியின் கனவு பாரிஸ்டராகவேண்டும் என்பதாகவே இருந்தது.

13. பட்டப்படிப்புக்காக ஐந்தாண்டுகள் செலவிடுவதைவிட மூன்றாண்டுகளில் பாரிஸ்டராகத் தயாரானார் காந்தி.

14. காந்தியின் கனவை குடும்ப நண்பர் வழியே புரிந்துகொண்ட புத்லிபாய், காந்தியை பாரிஸ்டராக்கத் தயாரானார்.

15. 18 வயது நிரம்பிய காந்தி சட்டம் படித்து பாரிஸ்டராகும் கனவுடன் லண்டனுக்குப் பயணமானார்.

காந்தி

16. மது, மாது, மாமிசம் ஆகிய மூன்றையும் தொடமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டே லண்டன் சென்றார் காந்தி.

17. லண்டனில் சுயமாகச் சமைக்கக் கற்றுக்கொண்ட காந்தி, இயன்றவரை சைவராகவே தொடர எத்தனித்தார்.

18. லண்டனில் இருந்தபோதுதான் பகவத்கீதையை முழுமையாக வாசித்து முடித்தார் காந்தி.

19. சட்டப்படிப்பை முடித்து, பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி, 1891ல் இந்தியா திரும்பினார்.

20. பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தியைப் பார்க்க அவருடைய தாயார் புத்லிபாய் உயிருடன் இல்லை.

21.1893-ல் தாதா அப்துல்லா கம்பெனியின் வழக்கறிஞராகப் பணியாற்ற தென்னாப்பிரிக்கா சென்றார் காந்தி.

22. காந்தி தென்னாப்பிரிக்காவின் நேட்டால் நகரில் கால்வைத்தபோது அவருக்கு வயது 24 மட்டுமே.

23. ஓராண்டு ஒப்பந்தத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி, அங்கே சுமார் 21 ஆண்டுகள் வசித்தார்.

24. பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிப் பிரச்னை காந்தியையும் தாக்கியது.

25. டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகையுடன் வாதாட காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

26. ரயிலில் சென்ற காந்தியை சக பயணிகளான வெள்ளையர்கள் நிறத்தைக் காட்டி வெளியேற்றினர்.

27. நிறவெறியால் ரயிலிலிருந்து வீசியெறியப்பட்ட நொடியில் காந்திக்குள் புரட்சி நெருப்பு பற்றியது.

28. காந்தி நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளான ரயில் நிலையத்தில் பின்னாளில் காந்திக்கு சிலை எழுப்பப்பட்டது.

29. தென்னாப்பிரிக்காவில் பாதிக்கப்படும் இந்தியர்களுக்காகக் குரல் எழுப்ப காந்தி தயாரானார்.

30. இந்திய தேசிய காங்கிரஸ் போல நேட்டால் இந்திய காங்கிரஸை உருவாக்கினார் காந்தி.

31. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் உரிமைக்குரலாக நேட்டால் இந்திய காங்கிரஸ் செயல்பட்டது.

32. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதைத் தீவிரமாக எதிர்த்தார் காந்தி.

33. பிரிட்டிஷாருக்கு எதிராக சத்தியாகிரகம் என்கிற புதிய போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தார் காந்தி.

34. இந்திய அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு 1896 ஆம் ஆண்டிலேயே தமிழகம் வந்திருக்கிறார் காந்தி.

35. தென்னாப்பிரிக்கா வாழ் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லவே தமிழகம் வந்தார் காந்தி.

காந்தி

36. முதல் தமிழகப் பயணத்தின்போது 14 நாள்கள் சென்னையில் தங்கிய காந்தி, 5 தமிழ் நூல்களை வாங்கினார்.

37. காந்திக்கு மகாத்மா என்ற அடைமொழியை வழங்கி கெளரவப்படுத்தியவர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

38. தாகூருக்கு முன்பே தமிழகம் காந்திக்கு மகாத்மா பட்டத்தை வழங்கிவிட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.

39. 1906-ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில்தான் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முதன்முதலில் நடத்தினார் காந்தி.

40. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைக்காக அறவழியில் போராடிய காந்தி அவ்வப்போது கைதானார்.

41. தென்னாப்பிரிக்கப் போராட்டக்களத்தில் இருந்தபோதுதான் காந்திக்கு திருக்குறள் அறிமுகமானது.

42. பிரிட்டிஷாருக்கு எதிரான காந்தியின் போராட்ட உத்திகள் இந்திய காங்கிரஸ் தலைவர்களைக் கவர்ந்தன.

43. காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்டங்களுக்குத் துணை நின்றவர்களுள் தில்லையாடி வள்ளியம்மை முக்கியமானவர்.

44. நேட்டாலில் நடந்த போராட்டத்தில் காந்தியைச் சுட்டுத்தள்ள போலீஸார் எடுத்த முயற்சியைத் தடுத்தவர் வள்ளியம்மை.

45. காந்திக்குப் பதில் தன்னைச் சுடுமாறு வள்ளியம்மை முன்னால் வந்து நின்றதால் துப்பாக்கிச்சூட்டைத் தவிர்த்தது போலீஸ்.

46. தென்னாப்பிரிக்காவில் தன் உயிரைக்காத்த வள்ளியம்மைக்கு தில்லையாடி வந்து அஞ்சலி செலுத்தினார் காந்தி.

47. இந்திய சுதந்தரப் போராட்டத்துக்கு காந்தியின் பங்களிப்பை கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர் விரும்பினர்.

48. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைக்குரலாக 21 ஆண்டுகள் முழங்கிய காந்தி, 1915-ல் இந்தியா திரும்பினார்.

49. காந்தி இந்தியா திரும்பிய 9 ஜனவரி வெளிநாடு வாழ் இந்தியர் நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

50. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய கையோடு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் காந்தி.

காந்தி

51. சம்பரன் பருத்தி விவசாயிகள் உரிமைகளுக்காக காந்தி தனது முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார்.

52. 1916-ல் லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் காந்தி – நேரு உறவு ஆரம்பமாகி, காந்தியின் மரணம் வரை தொடர்ந்தது.

53. சுதந்தரப் போராட்டத்துக்கு மத்தியில் எளிமையான வாழ்வைப் பின்பற்றி, அதையே போதிக்கவும் செய்தார் காந்தி.

54. தனது தலைப்பாகைக்கான துணியில் 4 பேரின் உடலை மறைக்கமுடியும் என்று சொல்லி தலைப்பாகையைத் தவிர்த்தார் காந்தி.

55. காந்தி தமிழகத்தில் இருந்தபோதுதான் பாரதியார் நேரில் வந்து காந்தியின் போராட்டங்களுக்கு ஆதரவளித்தார்.

56. குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட காந்திக்கு இந்தியின் மீது தீராக்காதல் இருந்ததால் அதைப் பரப்ப ஆர்வம் செலுத்தினார்.

57. சுதந்தரப் போராட்டத்தில் இந்தியர்களை ஒருங்கிணைக்க இந்தி சரியான கருவியாக இருக்கும் என்பது காந்தியின் கணிப்பு.

58. இந்தி பேசாத மக்கள் அனைவரும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நாடு முழுக்கப் பிரசாரம் செய்தார் காந்தி.

59. தென்னிந்தியர்கள் இந்தி கற்க ஏதுவாகவே 1918 ஆம் ஆண்டு சென்னையில் இந்தி பிரசார சபாவை உருவாக்கினார் காந்தி.

60. இந்தியர்களின் உரிமையைப் பறிக்கும் ரெளலட் சட்டம் 1919ல் அமலுக்கு வந்தபோது காந்தி தமிழ்நாட்டில்தான் இருந்தார்.

61. கருப்புச் சட்டமான ரெளலட் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழகத்தில் இருந்தே அழைப்பு விடுத்தார் காந்தி.

62. காந்தியின் அழைப்பை ஏற்று இந்தியா முழுக்கப் போராட்டம் வெடித்ததைக் கண்டு பிரிட்டிஷார் ஆத்திரப்பட்டனர்.

63. அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக்கில் கூடிய ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

64. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அடுத்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார் காந்தி.

65. காங்கிரஸ் தலைவராகி மதுரைக்கு வந்தபோதுதான் காந்தி எளிமையான அரையாடைக்கு மாறினார்.

66. இந்தியா முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்ற கனவை 1920களிலேயே வெளிப்படுத்தினார் காந்தி

காந்தி

67. கள் தயாரிக்கப் பயன்படும் தென்னை, ஈச்சமரங்களை வெட்டுமாறு இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார் காந்தி.

68. காந்தியின் அழைப்பை ஏற்றே தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார்.

69. பெரியாரின் மனைவி நாகம்மையும் சகோதரி கண்ணம்மாளும்தான் காந்தியின் மதுவிலக்குப் போராட்டத் தளபதிகள்.

70. அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கவேண்டும் என்று சொன்ன காந்தி, அதற்கு மாற்றாக கதரை முன்னிறுத்தினார்.

71. காந்தியின் கதர்க்கொள்கையை ஏற்றுக்கொண்ட பெரியார், கதர் விற்பனையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

72. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கத்துக்கு அழைப்புவிடுத்தார் காந்தி.

73. செளரி செளராவில் நடந்த போராட்டத்தில் போலீஸாரின் தாக்குதலுக்குப் பதிலடியாக மக்கள் வன்முறையில் இறங்கினர்.

74. அகிம்சைப் போராட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று சொல்லி போராட்டத்தைத் திரும்பப் பெற்றார் காந்தி

.

75. 1922ல் தேச விரோத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட காந்தி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

76. சத்திய சோதனை என்கிற தன்னுடைய சுயசரிதத்தை 1923 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினார் காந்தி.

77. உலக அளவில் வெளியான சுயசரிதைகளுள் காந்தியின் சத்திய சோதனைக்கு முதன்மையான இடம் உண்டு.

78. இந்தியாவுக்கு ஓராண்டுக்குள் சுதந்தரம் தராவிட்டால் சத்தியாக்கிரம் தீவிரமடையும் என 1928ல் அறிவித்தார் காந்தி.

79. அந்நியநாட்டுத் துணிகளை எரித்து, கதரை முன்னிலைப்படுத்தி மக்களை ஒருங்கிணைத்தார் காந்தி.

80. ஓராண்டு கெடு முடிந்ததும் 1929 டிசம்பரில் இந்திய சுதந்தரத்தை வலியுறுத்தி சத்தியாக்கிரகம் அறிவித்தார் காந்தி.

81. இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்பை எடுக்க இந்தியர்களுக்கே வரி விதித்ததைக் கடுமையாக எதிர்த்தார் காந்தி.

82. காந்தியின் போராட்ட வாழ்க்கையில் மிகமுக்கியமான அத்தியாயமாகக் கருதப்படும் தண்டியாத்திரை 1930ல் தொடங்கியது.

83. மார்ச் 12, 1930 அன்று அகமதாபாத் தொடங்கி தண்டி வரை 240 மைல்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டார் காந்தி.

84. பிரிட்டிஷார் விதித்த தடையை மீறி தண்டி கடலில் உப்பெடுத்த காந்தி கைதாகி, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

85. இரண்டாம் வட்டமேஜை மகாநாட்டில் பங்கேற்பது பற்றி அம்பேத்கரிடம் ஆலோசனை நடத்தினார் காந்தி

86. காங்கிரஸின் பிரதிநிதியாக இரண்டாம் வட்டமேஜை மகாநாட்டில் பங்கேற்றார் காந்தி. அதில் அம்பேத்கரும் பங்கேற்றார்

.

87. சாதிவாரி இடஒதுக்கீடு வழங்கிய பிரிட்டிஷாரின் முடிவை எதிர்த்த காந்தி, அது தனது மரணத்துக்கு ஒப்பானது என்றார்.

88. பிறகு காந்தி, அம்பேத்கர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.

89. காங்கிரஸின் தலைவர் பதவிக்கு காந்தி நிறுத்திய பட்டாபி சீதாரமையாவை வீழ்த்தி சுபாஷ் சந்திரபோஸ் தலைவரானார்.

90. பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனது தோல்வி என்று காந்தி சொல்லவே, உடனடியாக பதவி விலகினார் போஸ்.

காந்தி

91. 1934ல் மதுரை வந்த காந்திக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் அனுமதிக்கப்படாதது தெரியவந்தது.

92. மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படும் வரை அதற்குள் நுழையமாட்டேன் என்றார் காந்தி.

93. காந்தி ஆசியோடு வைத்திநாதய்யர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் முயற்சியில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தது.

94. ஆலய நுழைவுப்போராட்டம் வெற்றிபெற்றபிறகு 1946ல் தமிழகம் வந்தபோது மதுரை மீனாட்சி கோயிலுக்குச் சென்றார் காந்தி.

95. ஒத்துழையாமை இயக்கத்தால் தேர்தலில் இருந்து விலகியிருந்த காங்கிரஸ் 1937ல் காந்தி ஆசியுடன் தேர்தலில் குதித்தது.

96. சென்னை மாகாணத்தில் காங்கிரஸுக்குப் பிரசாரம் செய்ய திரை நட்சத்திரம் கே.பி.சுந்தராம்பாளை அழைத்துவந்தார் காந்தி.

97. காந்தியின் ஆசியோடு தேர்தல் களம் கண்ட காங்கிரஸ் இந்தியாவின் பல மாகாணங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது.

98. காந்தியின் கனவான மதுவிலக்கைத் தமிழகத்தில் ராஜாஜி தொடங்கி வைக்க, ஓமந்தூர் ராமசாமி முழுமைப்படுத்தினார்.

99. பிரிட்டிஷாருக்கு எதிராக 1942ல் ஆகஸ்டு புரட்சி என்கிற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தத் தீர்மானித்தார் காந்தி.

100. வெள்ளையனே வெளியேறு போராட்டம் தீவிரமடையவே, அதற்குக் காரணமான காந்தியை சிறையிலடைத்தது பிரிட்டிஷ் அரசு.

101. காந்தியின் வாழ்வுக்கும் போராட்டங்களுக்கும் துணை நின்ற கஸ்தூரிபாய் 22 பிப்ரவரி 1944 அன்று மரணம் அடைந்தார்.

102. காந்தி சிறையிலிருந்தபோது பாகிஸ்தான் கோரிக்கையைத் தீவிரமான அரசியல் போராட்டமாக மாற்றியிருந்தார் ஜின்னா.

103. சிறையிலிருந்து வெளிவந்த காந்தி, நவகாளியில் நடந்த இந்து – முஸ்லீம் கலவர சேதங்களைப் பார்த்து மனம் வெதும்பினார்.

104 இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக முகமது அலி ஜின்னாவுடன் பம்பாயில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் காந்தி.

105. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துவிடலாம் என்கிற காங்கிரஸின் முடிவைக் கடுமையாக எதிர்த்தார் காந்தி.

106. பாகிஸ்தான் தனிநாடாகவேண்டும் என்ற அரசியல் கோரிக்கை வன்முறைப் போராட்டமானது காந்தியை வருத்தப்படவைத்தது.

107. மதத்தின் பெயரால் இந்தியாவை இருண்டாகப் பிரிப்பது எதிர்காலத்தில் பேரபாயத்தை உருவாக்கும் என்று எச்சரித்தார் காந்தி.

108. என்னுடைய பிணத்தின் மீதுதான் இந்தியப் பிரிவினையை அமலுக்குக் கொண்டுவரமுடியும் என்று கறாராகச் சொன்னார் காந்தி

.

109. காந்தியின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவைப் பிரிக்க முடிவுசெய்த பிரிட்டிஷார், அதற்கான திட்டத்தையும் இறுதிசெய்தனர்.

110. திட்டத்தைப் படித்துப் பார்த்த காந்தி, பிரிவினைக்குத் தனது சம்மதத்தையும் மகிழ்ச்சியையும் எழுதிக்காட்டினார் காந்தி.

காந்தி

111. இந்தியா விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே பிரிவினைக்குச் சம்மதித்தாகச் சொன்னார் காந்தி.

112. பாகிஸ்தான் சுதந்தர நாடாக அறிவிக்கப்பட்ட மறுநாள் ஆகஸ்டு 15, 1947 அன்று இந்தியா சுதந்தர நாடாக அறிவிக்கப்பட்டது.

113. இந்தியாவுக்குச் சுதந்தரத்துக்காக 32 ஆண்டுகள் போராடிய காந்தி இந்திய சுதந்தரக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

114. பிரிவினையைத் தொடர்ந்து நடந்த இந்து முஸ்லீம் கலவரத்துக்கு எதிராக உண்ணாவிரதம் ஆரம்பித்தார் காந்தி.

115. பிரிவினை ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய 55 கோடி ரூபாய் பாக்கியை உடனே தருமாறு வலியுறுத்தினார் காந்தி.

116. காந்தியின் கோரிக்கையைக் கேட்டு கொதிப்படைந்த நாதுராம் கோட்ஸே காந்தியைக் கொல்லத் தீர்மானித்தார்.

117. பிர்லா மாளிகையில் இருந்த காந்தி 1948 ஜனவரி 30 அன்று மாலை நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

118. ஆயுள் முழுக்க அகிம்சையைப் போதித்த காந்தி, சுதந்தர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயலுக்கு இரையானார்.

119. காந்தி கொலையான செய்தி இந்தியாவைப் பதற்றப்படுத்தக்கூடும் என்பதால் வானொலியில் செய்தி சொல்லப்படவில்லை.

120. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்தபிறகே மாலை 6 மணிக்கு காந்தியின் மரணம் வானொலி வழியே அறிவிக்கப்பட்டது.

121. காந்தியைக் கொன்றவர் முஸ்லீம் என்ற செய்தி பரவிவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தினார் மெளண்ட்பேட்டன்.

122. காந்தியைக் கொன்றவர் கோட்சே என்கிற இந்து என்று மெளண்ட்பேட்டனின் ஆலோசனைப்படி வானொலியில் அறிவிக்கப்பட்டது.

123. மலர் மாலையை விரும்பாத காந்தி மீது அவர் நூற்ற நூல்களையே மாலையாக்கி அணிவித்திருந்தார் காந்தியின் மகன் தேவதாஸ்.

124. காந்தி உடலில் மீது தேசியக்கொடி போர்த்தி, முப்படை அதிகாரிகள் அணிவகுக்க காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

125. பிரிட்டிஷாரின் வெற்றி ஊர்வலங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட டெல்லி ராஜபாதையில்தான் காந்தியின் இறுதி ஊர்வலம் நடந்தது.

126. காந்திக்கான இறுதிக் காரியங்களை அவருடைய மகன் ராமதாஸ் செய்தார். அவரே காந்தியின் சிதைக்குத் தீமூட்டினார்.

127. காந்தியைக் கொலை செய்த கோட்ஸேவும் அவருக்குத் துணையாக இருந்தவர்களும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.

128. காந்தி கொலை குறித்து கோட்ஸே கொடுத்த வாக்குமூலம் 90 பக்கங்கள் கொண்ட புத்தகமாகப் பின்னாளில் வெளியானது.

129. 125 ஆண்டுகள் வாழ்வேன் என்று சொன்ன காந்தி உயிர்வாழக்கூடாது என்றே அவரைத் தீர்த்துக்கட்டினேன் என்றார் கோட்ஸே.

130. காந்தியைக் கொன்றது இந்து மத தர்மத்தையும் பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டது என்றார் கோட்ஸே.

131. சர்வதேச கவனம் பெற்ற படுகொலை என்பதால் காந்தி கொலை வழக்கு விசாரணை திறந்தவெளி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

132. காந்தி படுகொலை வழக்கை உடனடியாக விசாரித்து, ஏழே மாதங்களில் தீர்ப்பு வெளியிட்டார் நீதிபதி ஆத்மசரண்.

133. காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்குத் தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி ஆத்மசரண்.

134. காந்தியின் உயிரைக் குடித்த பெராட்டா துப்பாக்கியை ஏற்பாடு செய்த நாராயண ஆப்தேவுக்கும் மரண தண்டனை தரப்பட்டது.

135. கொலைச்சதியில் ஈடுபட்ட கோபால் கோட்ஸே, கார்கரே, மதன்லால், சங்கர் கிஸ்தய்யா, பார்ச்சூருக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டது.

136. காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

137. காந்தியின் பல கொள்கைகளில் திராவிட இயக்கத்தினருக்கு கருத்துவேறுபாடு இருந்தாலும், அவரை ”காந்தியார்” என்றே விளித்தனர்.

138. காந்தியின் மறைவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ”காந்திஸ்தான்” என்று பெயர் வைக்கவேண்டும் என்றார் பெரியார்.

139. காந்தியின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் சார்பில் பல இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

140. மதவாதிகளை விமர்சித்து திராவிட இயக்கத்தின் ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதிய காந்தியார் சாந்தியடைய நூல் தடைசெய்யப்பட்டது.

141. காந்தி தனது ஆயுட்காலத்தில் 20 முறை தமிழகம் வந்து தீண்டாமைக்கு எதிராக, மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார் காந்தி.

142. சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், கடலூர், தஞ்சை, மாயூரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றிருக்கிறார்.

143. மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம்தான் இந்தியாவில் காந்திக்காக அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம்.

144. காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் அவர் அணிந்திருந்த ஆடை ரத்தக்கறையோடு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

145. தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இடுவதற்குக் கற்றுக்கொண்டார் காந்தி.

146. சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகத்தை நேருவுக்குப் பரிந்துரைந்தவர் காந்தி.

147. மொழிவாரி மாகாணப் பிரிவினைக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை உருவாக்கியவர் காந்தி.

148. காந்தியால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்த காமராஜர், பூரண காந்தியவாதியாக வாழ்ந்து, காந்தி பிறந்தநாளன்றே மறைந்தார்.

149. காந்தி தனது அரசியல் வாரிசாக நேருவைத்தான் அறிவித்தார். காந்தியின் சரியான அரசியல் வாரிசாகவே விளங்கினார் நேரு.

150. என் வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி என்பதுதான் காந்தி மக்களுக்குச் சொன்ன அதி உன்னதமான தத்துவம்.

First published:

Tags: Gandhi Jayanti