ஜி 20 மாநாடு நிறைவு - உலக நாடுகளிடம் இந்தியா முன்வைத்தது என்ன...?

மாநாட்டின் நிறைவில் காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவை தவிர்த்த இதர 19 நாடுகளும் தீர்மானித்தன.

news18
Updated: June 30, 2019, 7:39 AM IST
ஜி 20 மாநாடு நிறைவு - உலக நாடுகளிடம் இந்தியா முன்வைத்தது என்ன...?
ஜி 20 மாநாட்டில் மோடி
news18
Updated: June 30, 2019, 7:39 AM IST
இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள ஜி20 நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஒரே நாளில் ஆறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் முதல் நாளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, இந்தோனேசியா, பிரேசில், இத்தாலி, துருக்கி, சிங்கப்பூர், ஆஸ்திரேலிய நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அப்போது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் சிறப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் விவசாயம் மற்றும் உயிர் எரிபொருள்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசனை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள், அகதிகள் விவகாரம் குறித்து விவாதித்தார். சந்திப்பின் இடையே ஆஸ்திரேலிய பிரதமரும் மோடியும் செல்ஃபி எடுத்துள்ளனர். மாரீசன் எடுத்த அந்த செல்ஃபியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தின் கீழே, "மோடி மிகவும் நல்லவர்" என பொருள்படும் இந்தி வாசகத்தை மாரீசன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்து ட்வீட் செய்துள்ள மோடி. நண்பா, ஊக்கமிகு நமது இரு தரப்பு உறவு மனதிற்கு இதமாக இருக்கிறது என கூறியுள்ளார்.இதனிடையே, பிரதமர் மோடி, ஜப்பானிய பிரதமர் அபே ஆகியோருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய சந்திப்பு தொடர்பான வீடியோவை அவரது மகள் இவாங்கா டிரம்ப் வெளியிட்டார்.

முன்னதாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோடி, சர்வதேச அளவில் மகளிரின் நிலை மேம்பட ஜி 20 நாடுகள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்னர், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையான உலகம் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

மதிய உணவுக்கு பின்னர் நடைபெற்ற பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, இயற்கையாலோ, மனிதர்களாலோ ஏற்படும் பேரழிவுகளில் இருந்து உடனடியாக மீள தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்காக ஜி 20 நாடுகள் சர்வதேச அளவில் கூட்டமைப்பை உருவாக்கி, இணைந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, பேரிடரில் இருந்து உடனடியாக மீளவும், மறு சீரமைப்பு பணிகளை மிக துரிதமாக செய்யவும் தேவையான தொழில் நுட்பம், செயல் திட்டம் ஆகியவற்றை ஜி 20 நாடுகள் வகுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜி20 மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, ஒசாகாவில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.14வது ஜி20 மாநாட்டின் முடிவில் இந்தியா அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தகப் பிணக்குகளை களைய பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதுபோல் அமெரிக்காவில் சீனாவின் ஹூவாய் தயாரிப்புகளை தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்ததும் மிகப் பெரிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, எல்லை கடந்து தரவுகளை சேமித்து வைப்பது தொடர்பான ஒசாகா பிரகடனத்தில் இந்தியா, எகிப்து மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் மட்டும் கையெழுத்திட மறுத்துவிட்டன. மாநாட்டின் நிறைவில் காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவை தவிர்த்த இதர 19 நாடுகளும் தீர்மானித்தன, இது அமெரிக்காவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Also See...

First published: June 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...