ஹோம் /நியூஸ் /இந்தியா /

வாடகைத்தாய் முறையில் விதிகளை மீறினார்களா விக்கி - நயன்? இந்திய சட்டம் சொல்வதென்ன? மருத்துவர் கூறும் விதிமுறைகள்!

வாடகைத்தாய் முறையில் விதிகளை மீறினார்களா விக்கி - நயன்? இந்திய சட்டம் சொல்வதென்ன? மருத்துவர் கூறும் விதிமுறைகள்!

ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களை கமர்ஷியல் வாடகைத் தாய் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களை கமர்ஷியல் வாடகைத் தாய் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களை கமர்ஷியல் வாடகைத் தாய் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

  • News18 Tamil
  • 6 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தாண்டு மார்ச் மாதத்தில் கசிந்த தகவலின்படி, நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. பின்னர் ஜூன் 9-ம் தேதி நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னை அருகே மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்து பின் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்த இந்த ஜோடி, பெரிதளவில் பொது வெளிகளில் தோன்றவில்லை என்றாலும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இந்நிலையில், நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்ட ஒரு இன்ஸ்டா பதிவால் இந்த ஜோடி மீண்டும் ‘ஹாட் டாப்பிக்’-ஆக மாறியுள்ளனர். அதில், தானும் நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்த பதிவால் சர்ச்சைக்குள்ளாகி உள்ளனர். அதற்கு காரணம், வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது.

வாடகைத் தாய் என்றால் என்ன?

வளர்ந்து வரும் மருத்துவ ஆராய்ச்சியின் இந்த காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவும் பல மருத்துவ முறைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு உடல்சார்ந்த பிரச்சனைக்கும் மருத்துவர்கள் தீர்வுகளைத் தேடுகின்றனர். வாடகைத் தாய்மை என்பது அத்தகைய குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றமாகும், இது சமீபத்தில் பெருமளவில் பிரபலமடைந்துள்ளது.

சட்டத்தின்படி, வாடகைத் தாய் என்பது ஒரு பெண், குழந்தை பிறக்கப் போகும் தம்பதியருக்குப் பிறந்த பிறகு அதைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையாகும். உன்னதமான நோக்கங்களைக் கொண்டவர்கள் அல்லது கருவுறாமை, நோய் உள்ள தம்பதிகள் மட்டுமே இதைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். விற்பனை அல்லது வேறு எந்த வகையான நோக்கத்திற்கும், வாடகைத் தாய்களின் வணிகப் பயன்பாடு அனுமதிக்கப்படாது. கூடுதலாக, குழந்தை பிறந்தவுடன், அது தம்பதியரின் குழந்தையாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். அத்தகைய கருவை கலைக்க வேண்டும் என்ற பட்சத்தில், வாடகைத் தாய் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுடன் மருத்துவக் கருவுறுதல் சட்ட விதிகளின்படி மட்டுமே கலைக்க முடியும்.

பொதுவாக வாடகைத் தாய்மை இரண்டு வகைகளை உள்ளடக்கியது. கர்ப்பகால வாடகைத் தாய் மற்றும் பாரம்பரிய வாடகைத் தாய். வாடகைத் தாய்க்கு செயற்கை முறையில் கருவூட்டுவதற்கு தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்துவது பாரம்பரிய வாடகைத் தாய் முறை ஆகும். இந்த பாரம்பரிய வாடகைத் தாய் முறையின்படி குறிப்பிட்ட வாடகைத் தாயின் கருமுட்டையில் கரு உருவாக்கப்பட்டதால், வாடகைத் தாய் குழந்தையின் உயிரியல் தாயாகக் கருதப்படுகிறார். கர்ப்பகால வாடகைத் தாய்மையில், தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்தணுவும் எடுக்கப்படும். அதாவது இரண்டுமே சட்டப்பூர்வ பெற்றோரிடமிருந்து பெறப்படும், இதன் கீழ் வாடகைத் தாய்க்கும், குழந்தைக்கும் உயிரியல் தொடர்பு இருக்காது.

சவால்கள் என்னென்ன?

எதிர்காலத்தில் குழந்தையின் சட்டப்பூர்வ உரிமைகளில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதால், அரசால் உத்தரவிடப்பட்ட சட்ட நடைமுறையைப் பின்பற்றி வாடகைத் தாய் முறை கையாளப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, வாடகைத் தாய்மை மற்ற கர்ப்பத்தைப் போலவே சில மருத்துவ சவால்களையும் உள்ளடக்கியது ஆகும்.

பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் கோலிவுட் நட்சத்திரங்கள் வரை:

நாளுக்கு நாள் சினிமா நட்சத்திரங்கள் குழந்தைகளைப் பெறுவதற்கு வாடகைத் தாய் முறையை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பாலிவுட், கோலிவுட் அல்லது வேறு எந்த திரையுலகில் இருந்தாலும், பிரபல தம்பதிகள் அல்லது ஒற்றைப் பெற்றோராக இருக்கக்கூடியவர்கள் இந்த வாடகைத் தாய் முறை மூலம் குழந்தைகளை பெற்று வளர்ப்பது மிகவும் பொதுவானதாகி வருகிறது. அதில் சில பட்டியல் இதோ.

Also Read : நயன்தாரா மட்டுமல்ல… வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்ற சினிமா பிரபலங்கள் இதோ

இந்திய திரை உலகில் அதிகபட்சமாக பாலிவுட் நட்சத்திரங்கள் வாடகைத் தாய் மூலமாக தங்கள் வாரிசுகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த முறையை பெரும்பாலானோர் பின்பற்றவில்லை என்றாலும் சில முக்கிய நட்சத்திரங்கள் வாடகைத் தாய் மூலம் தங்கள் வாரிசுகளை பெற்றுள்ளனர்.

அதில், பாலிவுட் சினிமாவில் இயக்குநர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஃபராகான் மற்றும் ஷிரிஷ் குந்தர் ஜோடி ஐ.வி.எஃப் எனப்படும் அதிநவீன சிகிச்சை மூலம் 2008-ம் ஆண்டு ஒரு ஆண் மற்றும் இரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான் மற்றும் கிரண் ராவ் ஜோடி கடந்த 2011-ம் ஆண்டு ஐ.வி.எஃப் மற்றும் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகினர்.

அதன் பின்னர் நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட சொஹைல்கான் மற்றும் சீமா கான் தம்பதியினர் 2011-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் தங்களின் இரண்டாவது குழந்தைக்கு பெற்றோராகினர். அதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் கௌரி கான் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலம் 2013-ம் ஆண்டு தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தனர். இவரைப் போலவே, கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கு திரைவுலகின் முன்னணி நட்சத்திரமான லக்‌ஷ்மி மஞ்சு மற்றும் அவரது கணவர் ஸ்ரீனிவாசன் ஒரு பெண் குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றனர். அதேபோல், பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர், திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார்.

கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பாலிவுட் திரைவுலகின் முன்னணி நடிகையும் மாடலுமான சன்னி லியோன் மற்றும் டேனியல் வெபர் ஜோடி, 2018-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகினர். பாலிவட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதியினர் கடந்த 2020-ம் ஆண்டு பெண் குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றனர். அதன் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் அவரது கணவர் ஜெனி குட்இனஃப் ஜோடிக்கு வாடகைத் தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தை பிறந்தது. இறுதியாக, கடந்த ஜனவரி மாதம் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

அவர்களின் வரிசையில் தற்போது கோலிவுட் நட்சத்திர ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.

வாடகைத் தாய் மசோதா:

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா முதலில் மக்களவையில் ஜூலை 15, 2019 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், அது ஒரு குழுவுக்கு அனுப்பப்பட்டு, பிப்ரவரி 5, 2020 அன்று, மசோதாவின் விரிவான திருத்தத்தைத் தொடர்ந்து அறிக்கை நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், 2021 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, ​​இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட, அது இந்த ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தின்படி, வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆவதற்குத் தகுதி மற்றும் அதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன தம்பதியர், (மனைவி 25 முதல் 50 வயது வரையிலும், கணவர் 26 முதல் 55 வயது வரையிலும்) தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள். தம்பதியரில் ஒருவர் அல்லது இருவருமே குழந்தையின்மையை நிரூபித்திருந்தால், அந்த ஜோடி மாவட்ட மருத்துவ வாரியம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பெற்றோரின் மற்றும் வாடகைக் குழந்தையின் பாதுகாப்பை நிறுவும் சான்றிதழைப் பெற தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். 16 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ஏதேனும் சிரமங்களை ஈடுசெய்யும் காப்பீட்டையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்று விதி.

ஆல்ட்ரூஸ்டிக் வாடகைத் தாய் vs கமர்ஷியல் வாடகைத் தாய்:

இது குறித்து குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் ஜெயராணி காமராஜ் கூறுகையில், ‘வாடகைத் தாய் முறை குறித்த தரவுகளை சீரமைக்க, அரசு சட்டங்களை கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. பல இடங்களில் ஆல்ட்ரூஸ்டிக் வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்பட்டுள்ளதால், மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பே கமர்ஷியல் வாடகைத் தாய் முறையை நிறுத்திவிட்டோம். மேலும், கருப்பை இல்லாதவர்கள், மருத்துவ காரணங்களால் கர்ப்பம் தரிக்காதவர்கள், புற்றுநோய் அபாயம் உள்ளவர்கள் அல்லது கருப்பையில் கருவை தக்கவைக்க முடியாதவர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் ஐவிஎஃப் முறை தோல்வியில் முடிவது ஆகியோருக்கு மட்டுமே வாடகைத்தாய் முறை தீர்வு. இருப்பினும், பிரபலங்கள் பலரும் தங்கள் வெளிதோற்றத்தை மட்டும் கருதி இந்த வாடகைத் தாய் முறையை கையில் எடுத்தால், அது ஒரு சரியான காரணமாக அமையாது என்று அவர் கூறினார்.

மேலும், பெண்கள் சுரண்டலுக்கு ஆளாகி வருவதால், கமர்ஷியல் வாடகைத் தாய் முறைக்கு அரசு தடை விதித்துள்ளது. ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களை கமர்ஷியல் வாடகைத் தாய் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. மிக முக்கியமாக, வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வருகிறார்கள், அங்கு அவர்கள் பெண்களைப் பயன்படுத்தி, அவர்களைச் சுரண்டி, வாடகைத் தாய்களாகப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் வெளிநாடுகளில் கட்டணங்கள் 20 முதல் 30 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் வறுமை காரணமாக கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. இந்தியாவில் கமர்ஷியல் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம். இருப்பினும், இஸ்ரேல், யு.எஸ்.எஸ்.ஆர், உக்ரைன் போன்ற நாடுகளில் இன்னும் கமர்ஷியல் வாடகைத் தாய் முறை உள்ளது, ஆனால் அதை வழிநடத்த கடுமையான சட்டங்களும் விதிமுறைகளும் உள்ளன. இதனால், பயனாளிகள் மற்றும் வாடகைத் தாய் இருவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று மருத்துவர் கூறினார்.

இந்தியாவில் வாடகைத் தாய் முறை தடைக்கு எது காரணம்?

மருத்துவர் ஜெயராணி பேசுகையில், சமூக-பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் பலர் வாடகைத் தாய்க்கு வருவதால், அவர்களின் உடல்நலம் சுரண்டப்படுகிறது. குஜராத் போன்ற மாநிலங்களில், பெரும்பாலும் பெண்கள் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அங்கு அவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைவாக இருக்கும் என்பது மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. இந்த சிக்கலான காரணிகளாலும், மிகக் குறைந்த பணத்திற்காக அவர்கள் வாடகைத் தாய் ஆவதாலும், அவர்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இழந்துள்ளனர். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே அரசு கமர்ஷியல் வாடகைத் தாய் முறைக்கு தடையை கொண்டு வந்தது. இருப்பினும், கமர்ஷியல் வாடகைத் தாய் முறையின் தடையால், உண்மையிலேயே அதன் மூலம் குழந்தை தேவைப்படும் மக்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் அனைவருமே ஆல்ட்ரூஸ்டிக் வாடகைத் தாய் முறைக்கு முன்வர முடியாது. அறிக்கைகளின்படி, 10,000 பெண்களில் ஒருவருக்கு கருப்பைகள் இருப்பதில்லை.

அவர்களுக்கு நெருங்கிய உறவினர் இல்லாவிட்டால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதே ஒரே வழியாக இருக்கும். எனவே, இது சட்டவிரோத கமர்ஷியல் வாடகைத் தாய் முறைக்கு வழிவகுக்கிறது. இதன்மூலம், உண்மையான தேவையுள்ள தம்பதி மீது அதிக தாக்கம் ஏற்படுகிறது. சட்டங்கள் பொதுவாக சரியானவையே. ஆனால், சில அவசியமான நபர்கள் தீர்வைத் தேடும் பட்சத்தில் எந்த வழியும் இல்லாமல், அவர்கள் கருப்பை இல்லாதிருந்தால் வாடகைத் தாய் முறையையே தேர்ந்தெடுக்க வேண்டும். சில நாடுகள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினாலும், அது எவ்வளவு பாதுகாப்பானது, ஒரு தாய் நீண்ட கால பக்க விளைவுகளை அனுபவிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே, உண்மையிலேயே வாடகைத் தாய் தேவைப்படும் தம்பதிகளுக்கு மிகவும் கடுமையான விதிகளுடன் கமர்ஷியல் வாடகைத் தாய்மை முறையை அரசு கொண்டுவர பரிசீலிக்கலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

மேலும், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் விவகாரத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Published by:Archana R
First published:

Tags: Nayanthara, Vignesh Shivan