இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மனு ஒன்ற தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிக்காக அர்த்தமற்ற முறையில், இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்குவது முறையற்ற செயல் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும், இலவசங்களை தருவதாக கூறி மக்களை ஏமாற்றும் போக்கானது நாட்டின் வளர்ச்சிக்கே ஆபத்தானது என எச்சரித்துள்ளார். பணம், வீட்டு பொருள்கள், மாணியம், உணவு பொருள்கள் எனத் தொடங்கி மதுபானம் வரை மக்களுக்கு இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வழங்குவது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. அவற்றின் சில உதாரணங்களை நாம் இங்கு பார்க்கலாம்.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா இந்த இலவச திட்டங்களுக்கு முக்கிய முன்னோடி எனலாம். இலவச மின்சாரம், செல்போன்கள், வைஃபை இணைப்புகள், மாணிய ஸ்கூட்டர் வாகனங்கள், உடனடி கடன்கள், இலவச மின்விசிறிகள், கிரைண்டர்கள் என பல இலவசங்கள் வாக்களர்களுக்கு வாரி இரைத்தவர் ஜெயலலிதா. மேலும் இவர் தொடங்கிய மலிவு விலை உணவகமான அம்மா உணவகம் பெரும் வெற்றி பெற்ற திட்டங்களில் ஒன்று. இதற்கான அடிப்படையை முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையிடம் இருந்து பெற்றார்கள் எனச் சொல்லலாம். 1960 காலகட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற வாக்குறுதியை அன்று அண்ணாதுரை அறிவித்தார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? - தேர்வு பணிகள் தொடக்கம்
இலவச திட்டங்களை பொறுத்தவரை திமுகவும் விதிவிலக்கல்ல. 2006ஆம் ஆண்டு திமுக அரசு கொண்டுவந்த இலவச கலர் தொலைக்காட்சி திட்டம் மாபெரும் வெற்றி திட்டங்களில் ஒன்று. ஆனால், 2011இல் ஜெயலலிதா ஆட்சி அமைத்ததும் இந்த இலவச கலர் டிவி திட்டத்தை நிறுத்திவிட்டார். அதேபோல், 2009ஆம் ஆண்டு திருமங்கலம் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் WiKiLeaks தளம் வரை பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக அகிலேஷ் யாதவ் இருந்தபோது இலவச லேப்டாப் திட்டத்தை செயல்படுத்தி இளைஞர்களின் நன்மதிப்பை பெற முயற்சித்தார். 2012 முதல் 2015 வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 15 லட்சம் லேப்டாப்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டத்தை பஞ்சாப்பில் சிரோமணி அகாலிதளம் கட்சி 1997 காலகட்டத்திலேயே அறிமுகம் செய்தது. தற்போதைய காலகட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தான் இந்த இலவச திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வரும் கட்சியாக திகழ்கிறது.2015ஆம் ஆண்டில் டெல்லியில் ஆட்சி கட்டிலில் அமர்ந்த ஆம் ஆத்மி, மின்கட்டணத்தை பாதியாக குறைப்பது, அனைத்து வீடுகளுக்கும் 700 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்குவது. இளைஞர்கள் ஊக்கதொகை, முதியோர் உதவித்தொகை, இலவச புனித பயண திட்டம் என பல இலவச திட்டங்கள் தொடர்ந்து ஆம் ஆத்மி செயல்படுத்தி வருகிறது.
இதற்கெல்லாம் முத்தாய்பாக, 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் துலாம் சரவணன் அளித்த வாக்குறுதி அனைவரும் தலைசுற்றி மயங்கிப் போய் விழும் அளவிற்கு மலைக்கவைத்தது. தொகுதி மக்களுக்கு இலவச ஐபோன்கள், நீச்சல் குளத்துடன் கூடிய வீடு, பெண்களுக்கு 100 சவரண் தங்கம், மினி ஹெலிகாப்டர், உச்சபட்சமாக நிலவுக்கு 100 நாள் இலவச சுற்றுப்பயணம் என தனது தேர்தல் வாக்குறுதியை கொட்டி தந்தார் சரவணன். ஆனால், அவர் வாக்குறுதியை நம்பி மக்கள் அவரை வெற்றி பெற வைக்கவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Free Rice, Political party, Supreme court