ஹோம் /நியூஸ் /இந்தியா /

3 நாட்கள் பயணித்து, மாரடைப்பால் மரணித்த மிசோரம் இளைஞரின் உடலை ஒப்படைத்த தமிழக ஓட்டுநர்கள்..!

3 நாட்கள் பயணித்து, மாரடைப்பால் மரணித்த மிசோரம் இளைஞரின் உடலை ஒப்படைத்த தமிழக ஓட்டுநர்கள்..!

ஜெயேந்திரன், சின்னத்தம்பி, மல்சன்ஹிமா

ஜெயேந்திரன், சின்னத்தம்பி, மல்சன்ஹிமா

ஊரடங்கால் செல்லும் ஊரெல்லாம் வெறிச்சோடிக் கிடக்க திறந்திருந்த ஒன்றிரண்டு ஓட்டல்களில் பசியாறி பயணத்தை தொடர்ந்துள்ளார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னையில் உயிரிழந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை அவசர ஊர்தியில் 3,300 கிலோ மீட்டர்கள் பயணித்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய உதவியிருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள்.

  லால்ரெம்சங்கா என்பவர் சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்த மிசோரம் மாநில இளைஞர். சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக இவரது உடலை 3 நாட்களில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து ஒப்படைத்து மிசோரம் மக்களின் மனதில் மட்டுமின்றி நாட்டு மக்களின் இதயத்திலும் இடம் பிடித்திருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த அவசர ஊர்தி ஓட்டுநர்களான ஜெயேந்திரன், சின்னத்தம்பி… எப்படி நிகழ்ந்தது இந்த சாகசப் பயணம்…

  ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் கடந்த 23-ஆம் தேதி சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார், 28 வயது மிசோரம் இளைஞர் லால்ரெம்சங்கா. அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் விரும்பினாலும் அனுப்பி வைக்க விமான சேவை இல்லை. அதனால் அவசர ஊர்தி மூலம் உடலை அனுப்ப சென்னையில் உள்ள மிசோரம் மக்கள் நலச் சங்கத்தினர் முடிவெடுத்தனர். சென்னையில் இருந்து லால்ரெம்சங்காவின் வீடு 3,345 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அவ்வளவு தூரம் அவசர ஊர்தியில் உடலை கொண்டு செல்ல இரு ஓட்டுநர்கள் தைரியமாக முன்வந்தனர். அவர்கள்தான் ஜெயேந்திரன். சின்னத்தம்பி. வழிகாட்டவும், மொழி தெரியாத மாநிலங்களில் உதவவும் ஒருவர் தேவை என்றபோது லால்ரெம்சங்காவின் நண்பர் மால்சன்ஹிமா உடன் பயணிக்கத் தயாரானார். கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய பயணம், ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம், மேகாலயா, அசாம் என ஐந்து மாநிலங்கள் வழியாகத் தொடர்ந்தது. ஜெயேந்திரனும், சின்னத்தம்பியும் தலா 8 மணி நேரம் மாறிமாறி அவசர ஊர்தியை ஓட்டிச் சென்றனர். ஊரடங்கால் செல்லும் ஊரெல்லாம் வெறிச்சோடிக் கிடக்க திறந்திருந்த ஒன்றிரண்டு ஓட்டல்களில் பசியாறி பயணத்தை தொடர்ந்துள்ளார்கள். மிசோரம் மாநிலத்திற்குள் பயணித்தபோது இவர்களின் சாகசப் பயணம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்துகொண்ட மக்கள் பல ஊர்களில் கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றுள்ளனர். 84 மணி நேர பயணத்தில் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள கிராமத்தில் லால்ரெம்சங்காவின் உடலை ஒப்படைத்தனர். லால்ரெம்சங்கா சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார். ஜெயேந்திரன், சின்னத்தம்பியை சேவைக்கு மிசோரம் மக்களின் பாரம்பரிய உடையை அளித்து அம்மக்கள் நன்றி பாராட்டியுள்ளனர். இருவருக்கும் பணமும், அன்பளிப்பும் அளித்து பாராட்டிய மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா, இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்.

  வழிகாட்டவும், மொழி தெரியாத மாநிலங்களில் உதவவும் லால்ரெம்சங்காவின் நண்பர் மால்சன்ஹிமா உடன் பயணித்தார்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Gunavathy
  First published:

  Tags: Mizoram