நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்களை குறிவைத்து எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருகிறேன் என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பீகாரை சேர்ந்த ஒரு கும்பல் நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு போன் செய்து எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருகிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறி உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவிக்கு போன் செய்த பீகாரை சேர்ந்த அசோக் என்பவர் உங்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருகிறேன். ரூ.10 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார்.
மாணவியின் குடும்பத்தினரும், அவரது பேச்சை நம்பி ஆன்லைன் மூலம் அசோக் கணக்கிற்கு ரூ.10 லட்சத்தை அனுப்பி வைத்தனர். அப்போது பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் உங்களுக்கு சீட் நிச்சயம் கிடைத்துவிடும் என்று அசோக் அவர்களிடத்தில் உறுதி அளித்துள்ளார்.
அதனை நம்பி சிறிது நாட்கள் மாணவியின் குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர். பின்னர் அசோக்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலே இருந்துள்ளது. இதன்பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த மாணவியின் குடும்பத்தினர், ஐதராபாத் போலீசில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் எம்.பி.பி.எஸ் சீட் மோசடி பேர்வழியை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் மங்கிபாக்ஸ் பரவலால் ஆபத்தா - நிபுணர்கள் கூறுவது என்ன?
இந்த நிலையில் அசோக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவருடன் சேர்ந்து இந்த மோசடி கும்லில் மேலும் 6 பேர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் அனைவரிடமும் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் அடையாள அட்டைகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இங்கு மோசடி செய்த பின் நேபாள அடையாள அட்டையை பயன்படுத்தி அங்கு சென்று பதுங்கி கொள்வது அவர்களுடைய வழக்கம் என்பதும் தெரியவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.