ஊழல் குற்றச்சாட்டையடித்து ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதி விசாரணைக்கு பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2012-ம் ஆண்டு பிரானஸ் நாட்டிடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் மத்தியில் ஆட்சி மாறிய நிலையில், ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
தொடர்ந்து 2015-ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் 36 விமானங்கள் வாங்குவதற்காக 58,000 கோடி ரூபாய் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயித்த விலையை விட பலமடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டில் விமானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
இதற்கிடையே, ஒப்பந்தத்தின்படி ரஃபேல் விமானங்களை டசால்ட் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன. இதுவரை 21 ரஃபேல் விமானங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதை பிரான்ஸ் தடுப்பு பிரிவு கண்டுபிடித்திருப்பதாக மீடியா ஃபார்ட் என்ற பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு ஊடகம் செய்தி வெளியிட்டது.
இந்த ஒப்பந்தத்தை பெற இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 9 கோடியை டசால்ட் நிறுவனம் லஞ்சமாக வழங்கியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டிருந்தது. பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் இந்த செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியது. ரஃபேல் போா் விமான ஒப்பந்தம் தொடா்பாக தன்னாா்வ அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதி ஒருவரை பிரான்ஸ் நியமித்துள்ளதாக மீடியா பார்ட் ஊடகம் தெரிவித்துள்ளது. ஜூன் 14ம் தேதி இது தொடர்பான விசாரணை முறையாக தொடங்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் இந்தியா அரசியலிலும் எதிரொலித்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. தற்போது, பிரான்ஸ் அரசு, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க நீதிபதியை நியமித்துள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாகி இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த விவகாரத்தில் உண்மை தெரியவரும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டை வலுவிழக்க செய்யும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் ஒப்பந்தம் வாயிலாக காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பலனும் கிடைக்காததால், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை அக்கட்சி தெரிவித்து வருவதாகவும் விமர்சித்தார். நாட்டை வலுவிழக்க செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, India and France, Rafale deal