டெல்லியில் மேலும் ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண்மணிக்கு இந்த குரங்கம்மை பாதிப்பானது ஏற்பட்டுள்ளது.
நாட்டில் குரங்கம்மை பாதிப்புக்கு ஆளான முதல் பெண் இவரே. ஏற்கனவே, டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இரு ஆண்களுக்கு குரங்கம்மை பாதிப்பு பதிவாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதை அடுத்து அங்கு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 70 தனிமைபடுத்தும் மையங்களை அமைத்துள்ளது. மக்களின் சுகாதார நலனே பிரதானம் என்பதால், தேவைப்படும் பட்சத்தில் படுக்கைகள் எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தியாவில் நோய் பரவலை கண்காணிக்க பிரத்தியேக குழு ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. நாட்டின் முதல் குரங்கம்மை பாதிப்பு கேரளாவில் பதிவானது. இதுவரை கேரளாவில் ஐந்து பேர், டெல்லியில் நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் இதுவரை இந்த தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லோரா குகைகளில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றம்..
1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970ம் ஆண்டு காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.
இந்த தொற்று பாதித்தவர்கள் 5-21 நாள்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவும், பாதிப்பு அறிகுறிகள் சருமத்தில் தென்படுவதற்கு 1-2 நாள்களுக்கு முன்னர் அந்நபருக்கு நோய் பரவியிருக்கம் என சுகாதாரத்துறை வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஆண்கள் மட்டுமல்லாது, குழந்தைகள், பெண்கள் என பலருக்கும் ஏற்பட்டாலும், தன்பாலின ஆண்களுக்கே அதிகம் காணப்படுவதால், இவர்கள் உறவில் ஈடுபடும் பார்ட்னர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுரை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.