மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நான்கு குழந்தைகளுக்கு ரத்ததின் மூலம் எச்ஐவி(HIV) தொற்று பரவிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
நான்கு குழந்தைகளுக்கு பிறப்பிலேயே தலசீமியா என்ற ரத்த சோகை பாதிப்பு நோய் இருந்துள்ளதால் அவர்களுக்கு தொடர்ச்சியாக ரத்த மாற்று சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இதற்காக ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெற்ற போதுதான் இந்த எச்ஐவி தொற்று தவறுதலாக பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் ஆர்கே தாகாதே கூறுகையில், 4 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றார். அதேபோல் உணவு மற்றும் மருந்துகள் ஆணையமும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் விக்கி ரூக்வானி இந்த சம்பவம் குறித்து கூறுகையில், சிகிச்சையின் போது இவர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ரத்த வங்கியில் பெற்ற ரத்ததின் மூலம் இவர்களுக்கு எச்ஐவி மற்றும் ஹெப்பாடிடிஸ் பி பாதிப்பு பரவியுள்ளது. பொதுவாக சிகிச்சைக்காக குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்னர் அந்த ரத்தம் NTA பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க:
மனைவி, நாயுடன் நடைப்பயிற்சி செய்ய விளையாட்டு மைதானத்தையே காலி செய்த ஐஏஎஸ் அதிகாரி
ஆனால், ரத்த வங்கியில் இந்த பரிசோதனை வசதி இல்லாத காரணத்தால், இந்த குழந்தைகள் எச்ஐவி பாதிப்புக்கு இரையாகியுள்ளனர் என்றார். ஏற்கனவே, ரத்த வங்கியில் பெற்ற ரத்தம் மூலம் ஐந்து குழந்தைகளுக்கு ஹெப்பாடிடிஸ் சி பாதிப்பும், இரு குழந்தைகளுக்கு ஹெப்பாடிடிஸ் பி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.