நான்கு மாநிலங்களில் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இதில் ஒன்றில் கூட
பாஜக வெற்றியை பதிக்க முடியவில்லை.
மேற்கு வங்கம், பிகார், மகாரஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாஜகவுக்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதியிலும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
அசான்சோல் மக்களவைத் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்ருகன் சின்ஹா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அக்னி மித்ராவை விட இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளார்.
அதேபோல், பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில் இணைந்த பபுல் சுப்ரியோ 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் பல்லிகஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் எதிர்க்கட்சியான பாஜக சிபிஎம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பின்னால் நான்காம் இடத்தையே பெற்றுள்ளது.
பிகார்
பிகார் மாநிலம் போச்சாச்சன் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியுடன் போட்டியிட்ட பாஜக இரண்டாம் இடத்தையே பிடித்தது.
மகாராஷ்டிரா மாநிலம்
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் மகாவிகாஸ் அகாதி கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜாதவ் ஜெய்ஸ்ரீ வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சத்யஜித் 18 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மகாரஷ்டிராவில் பாஜகவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கய்ராகர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோமல் ஜாங்கேல்லை விட 18 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜெசிசி கட்சியிடம் இருந்த இத்தொகுதி தற்போது ஆளும் கட்சியான காங்கிரஸ் வசம் சென்றுள்ளது.
- கண்ணன் வரதராஜன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.