முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவுநாள்! பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி

தங்க நாற்கர சாலைத் திட்டம், பொருளாதார மேம்பாடு என பல்வேறு திட்டங்களை வாஜ்பாய் அரசு செய்திருந்த நிலையில், இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்து 2004-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது பாரதிய ஜனதா.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவுநாள்! பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்
  • News18
  • Last Updated: August 16, 2019, 11:16 AM IST
  • Share this:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவுநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மலரஞ்சலி தெரிவித்தனர். 

மறைந்த வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர். கவிஞரின் மகனாக பிறந்து நாட்டை ஆளும் தலைவராக தம்மை தாமே உயர்த்திக் கொண்டவர்.

1944-ம் ஆண்டு ஆர்ய சமாஜத்தின் இளைஞர் அணியான ஆர்ய குமார சபாவில் இணைந்த அவர், அதன் பொதுச் செயலாளராக உயர்ந்தார். 1947-ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர பிரசாரகராக மாறினார்.


1948-ல் மகாத்மா காந்தி படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட, 1951ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கம் உருவானது.

வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை


அதன் முக்கிய தளகர்த்தராக மாறிய வாஜ்பாய், 1957-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் பைராம் பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.மிகச் சிறந்த பேச்சற்றலாலும், நிர்வாகத் திறமையாலும்,1968-ம் ஆண்டு ஜனசங்கத்தின் தலைவராக உயர்ந்தார் வாஜ்பாய்.

1973-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்த வாஜ்பாய் நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். 1977-ம் ஆண்டும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஜனதா கட்சி ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அத்வானி, பைரோன்சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியை 1980-ம் ஆண்டு தொடங்கினார் வாஜ்பாய்.

இதனால் 1995-ம் ஆண்டு குஜராத், மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி வாகை சூடியது. கர்நாடகத்திலும் கட்சி குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து 1996-ம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது பாரதிய ஜனதா கட்சி. அந்த தேர்தலில் பெற்ற வெற்றியால் மக்களவையில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.

ஆனாலும் பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் அவர் தமது பதவியை துறந்தார்.

1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்த பாஜக பெரும் வெற்றி பெற்றதால், வாஜ்பாய் இரண்டாவது முறையாக பிரதமரானார். அப்போதும் 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது.

ஆனால் இந்த 13 மாத கால ஆட்சியின் போது பொக்ரான் அணுகுண்டு சோதனை, லாகூர் பேச்சுவார்த்தை, கார்கில் போரில் வெற்றி என வாஜ்பாய் அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்ந்தியிருந்தது.

கார்கில் வெற்றிக்குப் பிறகு பாதுகாப்பு குறைபாடுகளை களைவதற்கு, முப்படைகளுக்கும் ஒரே தலைவர் தேவை என நிபுணர் குழு அறிக்கை அளித்தது. அதைத் தான், சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பல சாதனைகளை செய்ததால், 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெற, வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

இதன் மூலம் முழு ஆட்சிக் காலத்தையும், நிறைவு செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் வாஜ்பாய்.

தங்க நாற்கர சாலைத் திட்டம், பொருளாதார மேம்பாடு என பல்வேறு திட்டங்களை வாஜ்பாய் அரசு செய்திருந்த நிலையில், இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்து 2004-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது பாரதிய ஜனதா.

அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற, 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலில் இருந்து விலகினார் வாஜ்பாய். அதன் பின்னர் முழு ஓய்வில் இருந்த அவர், கடந்த ஆண்டு இதே நாளில் காலமானார்.

Also see...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்