கேரள காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் பாஜகவில் இணைந்தார்

விஜயன் தாமஸ்

காங்கிரஸில் இணைந்தது குறித்து விஜயன் தாமஸ் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். தேசிய அளவில் அவர்களுக்கு மாநிலக் கட்சிக்கான செல்வாக்கு கூட கிடையாது என்றார்.

  • Share this:
கேரள காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் விஜயன் தாமஸ் பாஜகவில் இணைந்தார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. பிரதான போட்டியாளர்கள் என்றால் இடதுசாரிகளும், காங்கிரஸும் தான். மாநிலத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் செயலாற்றி வருகிறது. இருப்பினும் சமீப நாட்களாக காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வருவது அக்கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

சமீபத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாட்டில் இருந்து 4 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். அதே போல மூத்த தலைவரும் தேசிய செய்தித்தொடர்பாளருமாக இருந்த பி.சி.சாக்கோவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் மற்றொரு சீனியர் தலைவராக விளங்கும் கேரள காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் விஜயன் தாமஸ் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங், செய்தித்தொடர்பாளர் டாம் வடக்கன் ஆகியோர் முன்னிலையில் விஜயன் தாமஸ் பாஜகவில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்தது குறித்து விஜயன் தாமஸ் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். தேசிய அளவில் அவர்களுக்கு மாநிலக் கட்சிக்கான செல்வாக்கு கூட கிடையாது. மூத்த தலைவர்கள் ஜி23 என பிரிந்து கிடக்கின்றனர். தற்போது யார் முடிவு எடுக்கிறார்கள், மாநிலங்களிலும் நிலைதடுமாறிப் போயுள்ளது காங்கிரஸ். நான் வெறும் தொடக்கம் தான். இன்னும் பலர் பாஜகவுக்கு வருவார்கள் என்றார்.

மேலும் சீட் கிடைக்காததால் தான் பாஜகவுக்கு வந்ததாக கூறப்படும் விவகாரத்தை மறுத்த அவர், தனக்கு சில கொள்கைகள் உள்ளதாக குறிப்பிட்டார். நான் சீட் எதிர்பார்த்து பாஜகவுக்கு வரவில்லை என்றார்.

விஜயன் தாமஸ் கட்சியில் இணைந்துள்ளது பாஜகவுக்கு புது தெம்பை அளித்துள்ளது. தென் மாநிலங்களில் கிறிஸ்துவ வாக்காளர்களிடையே செல்வாக்கை பெறத்துடிக்கும் அக்கட்சிக்கு விஜயன் தாமஸின் வருகை நிச்சயம் பலன் தரும் என்றே அக்கட்சி நம்புகிறது.

கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: