• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மருமகன் Twenty20 கட்சியில் இணைந்தார்!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மருமகன் Twenty20 கட்சியில் இணைந்தார்!

 உம்மன் சாண்டி

உம்மன் சாண்டி

2015 உள்ளாட்சித் தேர்தலில் கொச்சி மாவட்டத்தில் உள்ள 30,000 பேர் வசிக்கும் கிழக்கம்பலம் கிராம பஞ்சாயத்தில் பெருவாரியான வெற்றியை பதிவு செய்து முக்கிய கட்சிகளை திணறடித்தது Twenty20.

  • Share this:
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மருமகன் வர்கீஸ் ஜார்ஜ் Twenty20 கட்சியில் இணைந்தார். அவருடன் பிரபல இயக்குனரும், நடிகருமான லாலும் இக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மூத்த மகள் மரியா, இவருடைய கணவர் தான் வர்கீஸ் ஜார்ஜ். இவர்கள் இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் வர்கீஸ் ஜார்ஜ், Twenty20 எனும் கட்சியில் இணைந்துள்ளார்.

உம்மன் சாண்டி மருமகன்


Twenty20 கட்சியில் இணைந்தது குறித்து வர்கீஸ் ஜார்ஜ் கூறுகையில், உம்மன் சாண்டியின் செயல்பாடு பிடிக்காததால் நான் இக்கட்சியில் இணையவில்லை, ஆனால் Twenty20-ன் செயல்பாடுகள் எனக்கு பிடித்திருக்கிறது அதனால் தான் இதில் இணைந்தேன் என கூறினார்.

இதே போல நடிகரும், இயக்குனருமான லால், பிற கட்சிகளின் நோக்கம் எல்லாமே நன்றாகத்தான் உள்ளது. இருப்பினும் Twenty20 சற்று கூடுதல் நோக்கம் கொண்டதாக உள்ளது என்பதால் அதில் இணைகிறேன் என்றார்.

அது என்ன Twenty20?

2015 உள்ளாட்சித் தேர்தலில் கொச்சி மாவட்டத்தில் உள்ள 30,000 பேர் வசிக்கும் கிழக்கம்பலம் கிராம பஞ்சாயத்தில் பெருவாரியான வெற்றியை பதிவு செய்து முக்கிய கட்சிகளை திணறடித்தது Twenty20. மொத்தம் 19 வார்டுகளில் 17 ஐ கைப்பற்றியது. இதன் பின்னர் அந்த கிராம பஞ்சாயத்தில் தேவையான வளர்ச்சிப்பணிகளை பிறர் வாய் பிளக்கும் வகையில் செய்து காட்டியதால் 2020-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 18 வார்டுகளை கைப்பற்றி அசத்தியது.

இதுமட்டுமல்லாமல் ஐக்கரநாடு, குன்னத்துநாடு மற்றும் மழுவனூர் என்ற மேலும் 3 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்று திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த வெற்றி தந்த நம்பிக்கையை தொடர்ந்து தற்போது சட்டமன்ற தேர்தலிலும் இக்கட்சி களம் காணுகிறது. கொச்சியில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட உள்ளது. வெற்றியை கடந்து முக்கிய கட்சிகளின் வாக்கு வங்கியை Twenty20 பதம் பார்க்கும் என்பது உறுதி என கூறுகிறார்கள்.

Anna-Kitex குழுமங்களின் தலைவர் சபு எம்.ஜேக்கப் இக்கட்சியினை நடத்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: