ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1993 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் இவர் தண்டிக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.50 லட்சம் அபராதமும், முறைகேடாக வாங்கிய நான்கு சொத்துக்களையும் கைப்பற்ற நீதிபதி விகாஸ் துல் உத்தரவிட்டுள்ளார்.
ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானாவின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை இருந்துள்ளார். முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு எதிராக 2005ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து, 2010ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், வருமானத்தை விட 189.11 சதவீதம் கூடுதலாக இவர் தன் பெயரிலும், தனது குடும்பத்தினரின் பெயரில் சொத்து சேர்த்துள்ளது நிருபணமாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் ஏற்கனவே பத்தாண்டு சிறை தண்டனைக்கு ஆளானவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் இந்த தண்டனையை 2013ஆம் ஆண்டு முதல் அனுபவித்து வரும் நிலையில், கடந்தாண்டு இவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:
எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்.. அந்த அதிகாரியிடம் கொடுத்துடுங்க - ராஜஸ்தான் அமைச்சரின் பரபரப்பு ட்வீட்
இவரின் பேரனான துஷ்யந்த் சவுதாலா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளார். மாநிலத்தில் பாஜகவுக்கு தனிப் பெரும்பாண்மை இல்லாத சூழலில் துஷ்யந்த் ஹரியானாவின் துணை முதலமைச்சராக உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.