கர்நாடகாவில் முன்னாள் ராணுவ வீரர், மகன், மகள்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபல் ( வயது 46). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ஜெயா. கடந்த ஜூன் மாதம் ஜெயாவுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. அதற்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக ஜூன் 6-ம் தேதி உயிரிழந்துள்ளார். மனைவியின் மரணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமீபத்தில் அவரது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மனைவியின் மரணம் காரணமாக கோபால் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கோபால் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
போலீஸாரின் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவியின் பிறந்தநாளை மகன் மற்றும் மகள்களுடன் கொண்டாடியது தெரியவந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து தானும் விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. கோபால் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் இவ்வாறு கூறியுள்ளனர். எங்களுடைய மரணத்துக்கு யாரும் காரணமில்லை என கோபால் கடிதம் எழுதிவைத்துள்ளார். மேலும் இறுதிச்சடங்குகள் செய்வதற்காக ரூபாய், 20000 பணத்தை வைத்துள்ளார்.
கோபால் வீட்டில் இருந்து போலீஸார் கடிதம் மற்றும் பணத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் இப்படி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனரே என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.