FORCED BY OFFICIALS TO CLEAN MANHOLE AND HARASSED CLEANING WORKER TAKES OWN LIFE IN MANDYA MG
'விருப்பப்பட்டு இறங்கியதாகச் சொல்லச் சொன்னார்கள், சம்பளம் தரவில்லை’ - அதிகாரிகளின் அழுத்தத்தால் தூய்மைப் பணியாளர் தற்கொலை..
தூய்மைப் பணியாளர் நாராயணா
தலைமை அதிகாரி முருகேஷ் பேசியதாக கசிந்துள்ள ஆடியோவில், புகைப்படங்கள் மட்டுமே சரியான ஆதாரமாக இருக்காது என்றும், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று பேசும் தகவல் இருக்கிறது.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தின் மட்டூர் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை (23.02.2021) நாராயணா என்னும் தூய்மைப் பணியாளர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக, கழிவுநீர் தொட்டிக்குள் இவரை வலுக்கட்டாயமாக இவரை பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இறங்கச் சொன்னதாக, இவரது உயரதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
நாராயணா(34), நவம்பர் 3, 2020-ஆம் தேதி, மட்டூரில் தனது உயரதிகாரிகளால் வலுக்கட்டாயமாக பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இறக்கிவிடப்பதாக புகைப்படங்கள் கசிந்தது. அதைத் தொடர்ந்து குற்றம் தங்கள் மீது திரும்பிவிடக்கூடாது என்பதற்காக, “நாராயணா, தானாகவே விரும்பி கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியதாகச் சொல்லச் சொல்லி அவரது அதிகாரிகளால் தொல்லை கொடுக்கப்பட்டதாக” குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு தரவேண்டிய சம்பளத்தையும் அளிக்காமல், நாராயணாவை வேலைக்கு வரவேண்டாம் என்றும் கூறி அனுப்பிவிட்டதாக சக தொழிலாளர்கள் கூறுகின்றனர். நாராயணா தனது தற்கொலைக் குறிப்பில், தனது உயரதிகளான தலைமை அதிகாரி முருகேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஜசீம் கான் ஆகிய இருவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தலைமை அதிகாரி முருகேஷ் பேசியதாக கசிந்துள்ள ஆடியோவில், புகைப்படங்கள் மட்டுமே சரியான ஆதாரமாக இருக்காது என்றும், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று பேசும் தகவல் இருக்கிறது.
நாராயணாவுக்கு 5 வயதிலும், 7 வயதிலும் மகள்களும், 2-ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். அவரது மனைவி அருணா ஐந்து வருடங்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் எனவும், அதிகாரிகள் அளித்த அழுத்தத்தால் குழந்தைகள் ஆதரவற்றுப் போய்விட்டதாக சக தூய்மைப் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 26-ஆம் தேதி நாராயணா இறப்புக்கான நீதியை முன்வைத்து சக தொழிலாளர்களால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.