ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த போது 1996ம் ஆண்டு கால்நடைத் தீவன ஊழல் செய்தது தொடர்பாக அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தமாக சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான 4வது வழக்கில் ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவை ஏற்ற ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இதே வழக்கில் லாலு பிரசாத் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தண்டனையில் பாதி காலத்தை நிறைவு செய்யாததால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் பாதியளவு தண்டனை காலத்தை நிறைவு செய்ய மேலும் இரண்டு மாதங்கள் இருப்பதால், 2 மாதங்கள் கழித்து ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஜாமீன் மனுவை லாலு தரப்பு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அவருக்கு 3 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் விரைவில் லாலு பிரசாத் சிறையில் இருந்து வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கு முன்னதாக சாய்பசா கருவூலத்தில் இருந்து 37.7 கோடி ரூபாய் ஊழல் செய்தது, தியோகர் கருவூலத்தில் இருந்து 79 லட்ச ரூபாய் ஊழல் செய்தது, மேலும் ஒரு ஊழல் வழக்கு என 3 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் பெற்றுள்ளார்.
தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறித்து கூறிய தேஜஸ்வி யாதவ், “எனது தந்தைக்கு முறையான நீதி கிடைக்கும் என நம்பினோம், நல்ல தீர்ப்பு அளித்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்திற்கு நன்றி.
லாலு பிரசாத் தண்டனையில் பாதி காலம் கழித்துவிட்டார், அதனடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. தற்போது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனது தந்தைக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சி ஆனால் அவரின் உடல்நிலை குறித்து கவலைப்படுகிறேன்” என கூறினார்.
தற்போது ஜாமீன் கிடைத்துவிட்டாலும் கூட நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவதற்கும் மேலும் 3 முதல் 4 நாட்கள் ஆகும் என்பதால் அதன் பின்னரே லாலு பிரசாத் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Lalu prasad yadav, Scam