Home /News /national /

ஹிஜாப், ஹலால் மட்டும் போதாது.. வளர்ச்சித் திட்டங்கள்தான் முக்கியம் - கர்நாடக முதல்வருக்கு கட்சி மேலிடம் உத்தரவு

ஹிஜாப், ஹலால் மட்டும் போதாது.. வளர்ச்சித் திட்டங்கள்தான் முக்கியம் - கர்நாடக முதல்வருக்கு கட்சி மேலிடம் உத்தரவு

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

விவசாயிகள் அதிருப்தியை போக்கும் விதமாக பாசன திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த முதலமைச்சர் பொம்மைக்கு கட்சி அறிவுறுத்தியுள்ளது.

ஹிஜாப், ஹலால் போன்ற சிறுபான்மையினர் சார்ந்த விவகாரம் இந்துத்துவா வாக்கு வங்கியை சிறிது உயர்த்தினாலும், மாநில அரசின் வளர்ச்சி பணிகள்தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவும் என பாஜக மேலிடம் கர்நாடகா முதலைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்தார். அம்மாநிலத்தில் ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி என பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், முதலமைச்சரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,மாநிலத்தில் கட்சி நிர்வாகிகளை முற்றாக மாற்றி அமைக்க கட்சி மேலிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை முதலமைச்சரிடம் கட்சி மேலிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க - அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்க இயலாது: தேர்தல் ஆணையம் விளக்கம்

பாஜக தேசிய செயலாளருமான கர்நாடகா மாநில பொறுப்பாளருமான அர்ஜுன் சிங் ஏப்ரல் 12-24 தேதி கர்நாடகா செல்லவுள்ளார். அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஏப்ரல் 16,17 ஆகிய இரு நாள்கள் கர்நாடகா செல்கிறார். இந்த பயணத்தின் போது மாநில கட்சி அமைப்புகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி பயணத்தின் போது கட்சி மேலிடத்திடம் மாநிலத்தின் நிலவரத்தை எடுத்துரைத்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹலால் இறைச்சி, ஹிஜாப் போன்ற விவகாரங்கள் வாக்குவங்கியை கொஞ்சம் உயர்த்தினாலும், பட்ஜெட் வாக்குறுதிகள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றில்தான் அரசு கவனம் செலுத்தவுள்ளதாக அவர் கூறினார். மேலும், அமைச்சரவை மாற்றத்திற்கான பட்டியலை கட்சி மேலிடத்திடம் சமர்ப்பித்த பொம்மை, மேலிட ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - சொந்த மாநிலமான குஜராத்துக்கு துரோகம் செய்யும் அமித் ஷா - சித்தராமையா கடும் விமர்சனம்

மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை என கட்சி மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும், விவசாயிகள் அதிருப்தியை போக்கும் விதமாக பாசன திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த முதலமைச்சர் பொம்மைக்கு கட்சி அறிவுறுத்தியுள்ளது.

ஹிஜாப், ஹலால் போன்ற சிறுபான்மையினர் சார்ந்த விவகாரம் இந்துத்துவா வாக்குவங்கி சிறிது உயர்த்தினாலும், மாநில அரசின் வளர்ச்சி பணிகள்தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவும். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி என்பதைக் கொண்டே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என உறுதியாகி உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கவும், புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு அதிக பயணங்களை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடக்கு கர்நாடகா பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அங்கு தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவுவதாகவும் கட்சி மேலிடம் மாநில தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சி மாற திட்டமிட்டுள்ளதாகவும் கட்சிக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாருக்கும் இடையே நிலவும் பூசல் பாஜகவுக்கு சாதகமான அம்சம் என்றாலும், அதையே நம்பி இருக்க வேண்டாம் எனவும், மாநில தலைமை தனது பணியை கருத்துடன் செய்ய வேண்டும் என கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Karnataka

அடுத்த செய்தி