பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹோலி பண்டிகைக்கு பின்னர் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. தொடர்ந்து, நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், பகவந்த் சிங் மான் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை, பகவந்த் மான் சந்தித்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், பகத் சிங்கின் சொந்த ஊரான கத்கர் காலன் பகுதியில், வரும் 16ம் தேதி நண்பகல் 12.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறினார். விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். தனது தலைமையிலான அமைச்சரவை சிறப்பானதாக இருக்கும் எனவும், அதில் வரலாற்றில் இதுவரை எடுக்கப்படாத பல முடிவுகள், எடுக்கப்படும் என்றும், பகவந்த் மான் தெரிவித்தார்.
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், ஆளுநர் P.S, ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை பலத்துக்கான 21 இடங்களை கைப்பற்றவில்லை என்றாலும் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்எல்ஏக்களும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் துணை முதலமைச்சர் சந்திரகாந்த் காவ்லேகர், சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே, போக்குவரத்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோ ஆகியோரின் பெயர்கள் உள்ளன. மாநில பாஜக பிரமோத் சாவந்தை ஆதரிக்கும் நிலையில், தேசிய பாஜக உயர்நிலைக் குழு விஸ்வஜித் ரானேவுக்கு ஆதரவளிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மணிப்பூரை பொறுத்தமட்டில் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 32 இடங்களை கைப்பற்றி பாஜ பெரும்பான்மை பலத்தை தாண்டியுள்ளது. தற்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பளிக்க கூடாது என்று மாநில தலைவர்கள் சிலர் கூறிவருவதால் அங்கும் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் பாஜக தலைமை பிரேன் சிங்கை தேர்வு செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த புஷ்கர் சிங் தாமி தோல்வியைத் தழுவினாலும் அவரே முதலமைச்சராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் மாநிலத் தலைவர் பன்சிதர் பகத், அமைச்சர்கள் தன் சிங் ராவத், சத்பால் மகராஜ் ஆகியோரும் முதலமைச்சர் பதவியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஞாயிற்றுக் கிழமை டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். காபந்து முதலமைச்சராக நீடித்து வரும் ஆதித்யநாத்தின் புதிய அமைச்சரவை, ஹோலி பண்டிகைக்கு பின்னர் பதவியேற்கும் என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election 2022