Home /News /national /

500 ஆண்டு பாரம்பரிய கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கில் கூட்டம் - வெயில் வெப்பம் தாங்காமல் 5 பக்தர்கள் பலி

500 ஆண்டு பாரம்பரிய கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கில் கூட்டம் - வெயில் வெப்பம் தாங்காமல் 5 பக்தர்கள் பலி

கோயில் திருவிழாவில் ஐந்து பக்தர்கள் பலி

கோயில் திருவிழாவில் ஐந்து பக்தர்கள் பலி

இரண்டு ஆண்டு காலம் கோவிட் முடக்கம் காரணமாக இந்த விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தாண்டு விழாவில் அதிகளவில் கூட்டம் கூடியுள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஐந்து பக்தர்கள் தீவிர வெப்ப பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் நார்த் 24 பர்கானாஸ் என்ற மாவட்டத்தில் பனிஹாத்தி என்ற பகுதியில் இந்த கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. இஸ்கான்(ISKCON) கோயில் அமைப்பு சார்பில் இந்த விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவானது 500 ஆண்டுகள் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ஒன்றாகும். இதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேரம் ஆக ஆக அங்கு வெயில் வெப்பத்தின் அதிகரித்த நிலையில், பல பக்தர்கள் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். மயங்கி விழுந்த பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்திற்கு மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளார்.


    இரண்டு ஆண்டு காலம் கோவிட் முடக்கம் காரணமாக இந்த விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தாண்டு விழாவில் அதிகளவில் கூட்டம் கூடியுள்ளது. இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு அதிக கூட்டம் கூட காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பெண் முகத்தில் 118 தையல் - பாலியல் சீண்டலை எதிர்த்ததால் நேர்ந்த கொடூரம்

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ நிர்மல் கோஷ் கூறுகையில், 'கோவிட் காரணமாக இரண்டு ஆண்டுகள் விழா நடைபெறவில்லை. எனவே, இந்தாண்டு அதிக கூட்டம் திரண்டுள்ளது. இதில்,பல வயதான பக்தர்கள் இருந்ததால் அவர்களால் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியவில்லை' என்றார். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டு, விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Heat Wave, Mamta banerjee

    அடுத்த செய்தி