இறுதியாண்டு படித்து வந்த மருத்துவ மாணவர் கொரோனாவால் உயிரிழப்பு; உடன் படித்த மேலும் 9 மாணவர்களுக்கும் கோரோனா!

கொரோனா

மாணவர் சுபேந்துவிடம் தொடர்பில் இருந்த மேலும் 9 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.

  • Share this:
23 வயதாகும் எம்.பி.பி.எஸ் மாணவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததுடன், அவருடன் படித்து வந்த மேலும் 9 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் படித்து வந்த 23 மாணவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். சுபேந்து என்ற அந்த மாணவர் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணிகளால் கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று மாணவர் சுபேந்து கொரோனா கண்டறிவதற்கான RT-PCR பரிசோதனை மேற்கொண்டார்.

இதனையடுத்து விடுதியில் இருந்து சொந்த ஊரான பெகுசாராய்க்கு மாணவர் சுபேந்து கிளம்பிச் சென்றார். இதனிடையே கடந்த மார்ச் 1ம் தேதி அவருடைய பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று உறுதியான மறுநாள் (மார்ச் 2) இரவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாட்னா மருத்துவத்துறை வட்டாரத்தில் மாணவர் சுபேந்துவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சுபேந்துவிடம் தொடர்பில் இருந்த மேலும் 9 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.

மாணவர் சுபேந்துவின் உயிரிழப்பு தொடர்பாக நாலந்தா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி அஜய் கூறுகையில், மாணவர் சுபேந்து இறுதியாண்டு மாணவர், கொரோனா பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு சென்றார். பிப்ரவரி மாத இறுதியில் தான் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இருப்பினும் 2வது டோஸ் எடுக்காமல் முதல் டோஸ் மட்டுமே பயனளிக்காது என்று அரசு கூறியுள்ளது. இதுவரை அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 9 மாணவர்களுக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே மாணவர் சுபேந்துவின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தார். கொரோனா காரணமாக எந்தவொரு மருத்துவர் அல்லது மருத்துவ பணியாளரின் மரணமும் எங்களுக்கு வேதனையானது. இந்த நிலையில் மாணவர் இறந்த செய்தி கிடைத்ததும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மற்ற மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் சுகாதாரத் துறை கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
Published by:Arun
First published: