பீகாரை உலுக்கிய கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கிலும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என பீகார் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 1991-1996 ஆண்டுகளில் பீகாரின் முதலமைச்சராக இருந்தபோதும் கால்நடை துறையில் கால்நடைகளுக்கான தீவன வாங்க செலவிடப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் 1996ல் வெளிச்சத்துக்கு வந்தது.
950 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்ற இந்த மெகா ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் (சாய்பாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.7 கோடியும், ரூ.33.13 கோடியும், தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 கோடியும், தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.76 கோடியும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது) ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவர் தண்டனையை அனுபவித்து வருகிறார். 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5வது வழக்கான தோரந்தா கருவூல ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த ஜனவரி 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் தோரந்தா கருவூல வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக லாலு பிரசாத் யாதவ் நேரில் ஆஜரானார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 98 நபர்களும் ஆஜராகினர். இதில், 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: Hijab Row: ஹிஜாப் விவகாரம்: பள்ளி, தேர்வுகளை புறக்கணித்த மாணவிகள்
முன்னாள் எம்பி ஜெகதீஷ் சர்மா மற்றும் பொது கணக்கு குழு (பிஏசி) தலைவர் துருவ் பகத் உள்ளிட்ட 35 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 40 பேருக்கான தண்டனை விபரங்கள் பிப்ரவரி 21ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு 3 ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் ஜாமினில் வெளியே வர முடியும் . இல்லாதபட்சத்தில் மீண்டும் அவர் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.