• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வாராணாசியில் மோடி பெரும் வெற்றி! எதிர்கட்சிகளின் சூத்திரங்களை தகர்த்தது எப்படி

வாராணாசியில் மோடி பெரும் வெற்றி! எதிர்கட்சிகளின் சூத்திரங்களை தகர்த்தது எப்படி

பிரசாரத்தில் மோடி

பிரசாரத்தில் மோடி

வாரணாசியில் உள்ள யாதவ் மக்களின் வாக்குகளும் சிறுபான்மையினர் வாக்குகளும் மோடி எதிர்ப்பு வாக்குகளும் ஷாலினிக்கு தான் செல்லும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் ஷாலிலி யாதவ்வை விட 4 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    நாடு முழுவதும் நிலவும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். மோடி போட்டியிடுவதால் வி.ஐ.பி தொகுதிகளிலேயே முதலிடத்தைப் பிடித்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது வாரணாசி. மோடி போட்டியிடும் வாரணாசியில் ஏழாம் கட்டமாக இன்று தான் வாக்குப் பதிவு நடைபெற்றது.

    வாரணாசி வரலாற்று ரீதியாகவே இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் பகுதி. நாடு முழுவதுமுள்ள இந்துகள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காசி சென்றுவிட வேண்டும் என்று எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள். இந்து சென்டிமென்ட் சூழ்ந்திருக்கும் பகுதி. அதனாலோ என்னவோ, மோடி முதன்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாரணாசி தொகுதியைத் தேர்ந்தெடுத்தார்.

    ஷாலினி யாதவ்


    2001-ம் ஆண்டு முதல், அசைக்க முடியாத தலைவராக நான்கு முறை குஜராத்தின் முதல்வராக இருந்த மோடியை, 2014-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேசிய அரசியலுக்கு கொண்டுவந்தது பா.ஜ.க. நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான மிகப்பெரும் எதிர்ப்பு அலை நிலவிய காலம் அது. பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு நிலவியபோதும், நாடு முழுவதும் அறியப்படும் ஒரு தலைவர் வேண்டும் என்பதற்காக மோடியை முன்னிறுத்தியது பா.ஜ.க.

    குஜராத்தில் மிகப் பெரிய தலைவராக மோடி இருந்தபோதிலும், அவர் போட்டியிடுவதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி தொகுதியைத் தேர்வு செய்தது பா.ஜ.க. வாரணாசியைத் தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, வாரணாசி பா.ஜ.கவின் கோட்டை. மற்றொரு இது இந்துகளுக்கான பிரதான அடையாளம்.

    பிரதமர் மோடி


    1991-ம் ஆண்டிலிருந்து வாரணாசி தொகுதி பா.ஜ.கவின் கோட்டையாக இருந்துவருகிறது. 1991-ம் ஆண்டுக்குப் பிறகு 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க பெரும் செல்வாக்குடன் வெற்றிபெற்றுள்ளது.

    2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் பெரும் வெற்றி பெற்றார் மோடி. வாரணாசியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3.70 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

    இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், வதோதரா தொகுதியில் ராஜினாமா செய்தார் மோடி. வாராணாசி தொகுதியின் பிரதிநிதியாகவே பிரதமராகப் பொறுப்பேற்றார். உத்தரப் பிரதேசத்தில் எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்துள்ளநிலையிலும், வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் மட்டுமே அவர் போட்டியிடுகிறார். வாரணாசியில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

    இதுகுறித்து தெரிவித்த பிரியங்கா காந்தி, கட்சி மேலிடம் விருப்பப்பட்டால் மோடியை எதிர்த்து போட்டியிடத் தயார்’ என்று அறிவித்தார். மேலும், வாரணாசிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் தாமதப்படுத்தியது காங்கிரஸ். அதனால், பிரியங்கா காந்திதான் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காதவகையில், அஜய் ராயை நிறுத்தியது காங்கிரஸ். அவர், தான் கடந்தமுறை மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். கடந்த முறை, மூன்றாவது இடத்தையே பிடித்தார். அவரை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகமிழக்க செய்துவிட்டது.

    ஆனால், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி மோடிக்கு கடும் நெருக்கடி கொடுக்கவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். ராணுவத்தில் உணவு சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பஹதூர் யாதவை முதலில் வேட்பாளராக அறிவித்தது சமாஜ்வாடி கூட்டணி. தேஜ் பஹதூரிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று அவரது வேட்புமனு நிராகரித்தது தேர்தல் ஆணையம். அதனையடுத்து, ஷாலினி யாதவ்வை வேட்பாளராக அறிவித்தது சமாஜ்வாடி கூட்டணி. இவர், காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவருடைய மாமனார், ஷ்யாம் லால் யாதவ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். மத்திய அமைச்சராக இருந்தவர்.

    2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வாரணாசி தொகுதியில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு 1.14 லட்சம் வாக்குகளைப் பெற்றார். சமீபத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளிலியே இதுதான் அதிகம். ஆனால், இந்தமுறை சமாஜ்வாடி கூட்டணியில் போட்டியிடுகிறார். வாரணாசியில் உள்ள யாதவ் மக்களின் வாக்குகளும் சிறுபான்மையினர் வாக்குகளும் மோடி எதிர்ப்பு வாக்குகளும் ஷாலினிக்கு தான் செல்லும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். எனவே, ஷாலினிதான் மோடிக்கு கடும் போட்டி கொடுப்பார்.

    கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஷாலினி, தேசியப் பிரச்னைகள் எதையும் முன்னிறுத்தாமல் மக்களின் அடிப்படை பிரச்னைகள் கூறி வாக்கு சேகரித்தார். சாலை வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முன்னிறுத்தி வாக்கு சேகரித்தார். அது அவர்களை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்த்தது. இருப்பினும், மோடி என்னும் மிகப் பெரும் ஆளுமைக்கு இத்தகைய நெருக்கடிகள் சவாலாக இருந்துவிட முடியாது. ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி சாலைகளில் மிகப் பெரும் பேரணியாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்து தன்னுடைய செல்வாக்கை எதிர்கட்சிகளின் கண் முன்னால் கொண்டு வந்துநிறுத்தினார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்களான நிதிஷ் குமார், ராம் விலாஸ் பஸ்வான், ஓ.பன்னீர் செல்வம், உத்தவ் தாக்கரே அகியோரையும் அழைத்து அசத்தினார்.

    1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோல்வியடைந்ததைப் போல இந்தமுறை வாரணாசியில் மோடி தோல்வியடைவார் என்று மாயாவதி சூளுரைத்துள்ளார். இருப்பினும், மோடி எனும் மாயமனிதன் இத்தகைய எதிர்ப்புகளைக் கடந்து வாரணாசியில் எதிர்கட்சிகள் வேட்பாளர்கள் அனைவரையும் விட பெரும் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். 63 சதவீத வாக்குகளுடன் 6 லட்சத்து 75 வாக்குகள் பெற்று மோடி வெற்றி பெற்றார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: