ஆந்திராவில் சடலத்தை இரண்டு கிலோ மீட்டர் தோளில் சுமந்துசென்ற பெண் எஸ்ஐ: குவியும் பாராட்டு

ஆந்திராவில் சடலத்தை இரண்டு கிலோ மீட்டர் தோளில் சுமந்துசென்ற பெண் எஸ்ஐ: குவியும் பாராட்டு

சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்ஐ சிரிஷா

டிஜிபி கெளதம் சவாங் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில், அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை இரண்டு கிலோ மீட்டர் தூரம், தனது தோளில் சுமந்துசென்று இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த பெண் உதவி ஆய்வாளரை பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ஆந்திரபிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாச மண்டலம், காசிபுக்கு நகராட்சிக்கு உட்பட்டது அடவி கொத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இருப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காசிபுக்கு காவல்நிலைய பெண் எஸ்ஐ சிரிஷா, சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, இறுதிச் சடங்கு செய்யவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் சடலத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் முன்வரத் தயங்கினர்.

எனவே, எஸ்ஐ சிரிஷா உதவிக்கு வந்த சிலருடன் சேர்ந்து ஸ்ட்ரச்சரில் வைத்து தனது தோளில் சுமந்தபடி இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து அந்த சடலத்தை ஊருக்கு வெளியே கொண்டு வந்தார். பின்னர் லலிதா தன்னார்வ அமைப்பின் மூலம் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

மேலும் படிக்க... பட்ஜெட் 2021 : அனைத்து துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்!

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், டிஜிபி கெளதம் சவாங் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதேபோல, சமூக வலைதளங்களிலும் சிரிஷாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.
Published by:Suresh V
First published: