காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா, அகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காஷ்மீர் மாநில காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் மூலம் நீக்கப்பட்டது. அதனையடுத்து, ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 8-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் மாநிலத்தின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை. அவராகத்தான் நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று விளக்கமளித்தார்.
இந்தநிலையில், அவர் ஆகஸ்ட் 4-ம் தேதியிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ’பருக் அப்துல்லாவும் நானும் நீண்ட கால நண்பர்கள். மத்திய அரசு அவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது. அவரை, உச்ச நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.போப்டே, எஸ்.ஏ.நிசீர் ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
வைகோவின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, ‘பருக் அப்துல்லா, வைகோவின் உறவினர் கிடையாது. பருக் அப்துல்லாவை விடுதலைச் செய்யக்கோரும் வைகோவின் மனு சட்டநடைமுறைக்கு எதிரானது’ என்ற வாதத்தை முன்வைத்தனர். மத்திய அரசின் வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 30-ம் தேதி மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் அறிக்கை அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக நியூஸ்18 சார்பாக காஷ்மீர் மாநில காவல்துறை உயரதிகாரியிடம் தொடர்பு கொண்டபோது, ’பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பருக் அப்பதுல்லா கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லாமல் இரண்டு ஆண்டுகள் வரை ஒருவரை சிறைப்படுத்தலாம். இந்தச் சட்டம் முதன்முறையாக, பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா மீது நடைமுறைப்படுத்தப்பட்டது. பரூக் அப்துல்லாவை உறவினர்களும், நண்பர்களும் சென்று சந்திப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Article 370, Kashmir