Home /News /national /

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசிடம் இருந்து முறைப்படி கடிதம் வந்த பிறகு வியாழக்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் விவசாயிகளின் போராட்டம் தொடருவதாகவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அனுப்பிய மாற்றியமைக்கப்பட்ட வரைவு அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. எனினும், மத்திய அரசிடம் இருந்து முறைப்படி அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

    மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது, பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை திரும்ப வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை மத்திய வேளாண் அமைச்சர் தோமர் விவசாய சங்கங்களுக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட விவசாயிகள் குழு ஆலோசனை மேற்கொண்டது.

    அதன்பிறகு டெல்லி எல்லையில் உள்ள சிங்கு பகுதியில் 32 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குருநாம் சிங் சருணி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அனுப்பிய மாற்றியமைக்கப்பட்ட வரைவு அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

    மத்திய அரசிடம் இருந்து முறைப்படி கடிதம் வந்த பிறகு வியாழக்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் விவசாயிகளின் போராட்டம் தொடருவதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 13 மாதங்களாக போராட்டம் நடத்தி வந்ததாகக் குறிப்பிட்டார். விவசாயிகளின் ஒற்றுமை, அர்ப்பணிப்புமே பிடிவாதமான அரசை இந்த சட்டங்களை திரும்பப் பெற வைத்ததாகவும், இதற்காக விவசாயிகளை வணங்குவதாகவும் தெரிவித்தார்.

    அவையில் விவாதிக்காமல் வேளாண் சட்ட மசோதாக்களை நிறைவேற்றியதைப் போன்று விவாதமே இல்லாமல் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பதாகவும், இது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்றும் அவர் சாடினார்.

    Must Read : EXCLUSIVE VIDEO | ஹெலிகாப்டர் விபத்து... பரபரப்பான இறுதி நிமிடங்கள்...

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், சாகுபடி செலவுகளுக்கு ஏற்ப லாபகரமான விலை, உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது ஆகிய விவகாரங்களில் விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். பிரதமர் மோடி அரசு ஏன் உணர்வற்று இருக்கிறது என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சோனியா காந்தி கடுமையாக சாடினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Agricultural act, Delhi farmers, Farmers Protest

    அடுத்த செய்தி