Home /News /national /

துவள வைக்கும் மழையும், சட்டமும் - விவசாயிகள் எதிர் நீச்சல்!

துவள வைக்கும் மழையும், சட்டமும் - விவசாயிகள் எதிர் நீச்சல்!

வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலம்

வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலம்

வெள்ள பாதிப்பால் துவளும் விவசாயிகள் ஒருபுறம், சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மறுபுறம் என விவசாயிகளின் துயரம் தொடர்கின்றது.

'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்றும், 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் விவசாயத்தின் சிறப்பை எடுத்துரைத்தார் திருவள்ளுவர். காலங் காலமாய் எத்தனையோ இயற்கை சீற்றங்களையும், பஞ்சங்களையும் கடந்து விவசாயிகள் முன்னேறி வந்துள்ளனர். சமீபத்தில், வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான புயலால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவகின்றது. இதனால், விளை நிலங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.

குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன. அத்துடன், எப்போதும் புயல் மழையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டமாக கடலூர் இருந்து வருகின்றது. சுமார் 3678 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இந்த மாவட்டத்தின் பிரதான தொழிலாக இருப்பது விவசாயம். இங்கே ஐந்து பெரிய ஆறுகள் இருக்கின்றன. சமீபத்தில் பெய்துவரும் மழையால் இங்கே 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பயிருடன் நீரில் மூழ்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதேபோல, தமிழகமெங்கும் விவசாயிகள் புயல் மழையால் பாதிப்படைந்துள்ளனர்.

இதுபோன்ற இயற்கை சீற்றங்களால், விவசாயிகளின் உழைப்பும் பணமும் நாசம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கின்றது. அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிப்படைந்து கொண்டே இருக்கின்றது. ஆனபோதிலும், அவர்கள் மனம் உடைந்து போய்விடுவதில்லை. அவர்கள் விளைவிக்கும் பயிரைப்போல மீண்டும் மீண்டும் பச்சை கட்டி, தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வருகின்றனர். அப்படித்தான் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இருந்தும் எதிர் நீச்சல் அடித்து முன்னேற இருக்கின்றனர்.

இப்படியாக, இயற்கை சீற்றத்தை வென்று முன்னேறுவது ஒருபுறம் இருந்துவரும் நிலையில், மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகின்றது. பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநில விவசாயிகள் டெல்லியில் தொடங்கிய போராட்டத்திற்கு பிற மாநில விவசாயிகளும் ஆதரவு கொடுத்ததுடன் டெல்லியை நோக்கி செல்லத் தொடங்கினர். 13-ஆம் நாளாகத் தொடரும் இந்தப் போராட்டம், பல லட்சம் மக்களுடன் மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்திய விவசாயத்தின் தன்மை பற்றி ஆராய்ந்த அறிஞர் ஒருவர், “ஐரோப்பிய நாடுகளின் விவசாயம் நல்ல அல்லது கெட்ட பருவநிலையைப் பொறுத்து இருப்பதைப்போல, இந்தியாவில் அது, நல்ல அல்லது கெட்ட அரசாங்கத்தைப் பொறுத்தே இருக்கின்றது” என்றும் ‘‘ஓர் ஆட்சியில் விவசாயம் மோசமடைவதும், வேறொரு ஆட்சியில் புத்துயிர் பெறுவதும் வழக்கமாக ஒன்றுதான்” என்று விவரித்தார். இது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கின்றது. அதேபோல, ‘நீர் மேலாண்மையும் அரசாங்கத்தை நம்பியே இருப்பதாகவும்’ குறிப்பிட்டார்.

இந்தியாவில் விவசாயத்தின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நலனுக்கும் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. வெள்ள பாதிப்பால் துவளும் விவசாயிகள் ஒருபுறம், சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மறுபுறம் என விவசாயிகளின் துயரம் தொடர்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றி வளர்க்கப்பட்டு வரும் விவசாயத்தையும், அதனைக் காத்து வரும் விவசாயிகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் அக்கறையோடு பரிசீலித்து பாதுகாக்க வேண்டியது நமது அரசாங்கத்தின் கடமை.
Published by:Suresh V
First published:

Tags: Cuddalore, Cyclone, Farmers Protest

அடுத்த செய்தி