காஷ்மீரில் சர்வதேச எல்லையை (IB) ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் பாதுகாப்பு படையினரின் துணையோடு, 20 ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயிகள், விவசாய பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத நடவடிக்கைகளால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் ஸ்திரமான பதிலடி நடவடிக்கைகளால் தற்போது நிலைமை மாறத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள கத்துவா மாவட்டமானது தீவிரவாதிகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு மாவட்டமாகும். அங்கு பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியை நோக்கி அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வந்ததால் எல்லைப் பகுதிகளை ஒட்டிய விவசாயிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயத்தையே கைவிட்டு வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: அரசு நிதியுதவிக்காக சொந்த சகோதரியை திருமணம் செய்த நபர்
அப்பகுதியினரின் முக்கிய தொழிலே விவசாயம் என்றிருந்த நிலையில் சுமார் 5,000 ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் இல்லாமல் நிலங்களும் பாழாகிவந்தன. இந்நிலையில் காஷ்மீர் மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக கத்துவா மாவட்டத்தில், இந்திய எல்லையின் வேலிப் பகுதிக்கும் சர்வதேச எல்லைக்கும் இடையேயான விவசாய நிலங்களில் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினரின் (BSF) பாதுகாப்போடும், மாநில விவசாயத் துறையின் வழிகாட்டுதலுடனும் கோதுமை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘தடுக்க முடியலைனா பாலியல் வன்புணர்வை என்ஜாய் பன்னுங்க’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை
ஹிராநகர் செக்டரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் நிலங்களை உழும் பணியை தொடங்கியுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாதுகாப்பு தருகின்றனர். காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி உரங்கள், விதைகள், டிராக்டர்கள் போன்ற உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
முதற்கட்டமாக 100 ஏக்கரில் விவசாய பணிகளை முடுக்கிவிட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், மத்திய அரசு எடுத்த ஸ்திரமான நடவடிக்கைகளின் பயனால் தற்போது இப்பகுதியில் நிலைமை மாறியிருக்கிறது. விவசாயப் பணிகளை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்டம் மூலம் தமிழகத்தில் ₹10 கோடி மோசடி செய்த மென்பொறியாளர்கள்
இதே போல எல்லை பாதுகாப்பு படையின் தளபதி அதுல் ஷா, சாந்த்வான் பகுதியில் உள்ள அவுட் போஸ்டை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடையே பேசுகையில், இந்த நிலங்கள் புதர் மண்டி கிடப்பதால் ஊடுருவல்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது விவசாயப் பணிகள் தொடங்குவதால் இது எங்களுக்கும் பயன்மிக்கதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.