மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி மற்றும் டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திக்ரி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். டெல்லி - மீரட் விரைவுச்சாலையை டிராக்டர்களுடன் முற்றுகையிட்ட விவசாயிகள், மறியலில் ஈடுபட்டனர். காஜிபூர் எல்லையில் நடந்த போராட்டத்தால், டெல்லி - காஜியாபாத் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஜிபூர் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
விவசாயிகளின் போராட்டத்தால் காஜிபூர் எல்லை மூடப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதேபோல் நொய்டா மற்றும் காஜியாபாத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய சில்லா எல்லையும் போராட்டம் காரணமாக மூடப்பட்டது.
மத்திய அரசின் வாக்குறுதிகளை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், கடந்த 9ம் தேதி நடைபெற இருந்த 6வது கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சரிடம் இருந்து தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகரில், டிராக்டர் பேரணி நடைபெற்றது.