விவசாயிகள் போராட்டத்தினால் சில கிராமங்கள் கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக மாற்றப்பட்டுவிட்டதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அளித்துள்ள பேட்டியில், விவசாயிகள் போராட்டம் குறித்தும் அதனால் ஹரியானாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் பேசியுள்ளார்.
முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், “கடந்த மாதமே விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தேன். நிலைமை சரியான பின்னர் மீண்டும் உங்கள் போராட்டத்தை தொடரலாம் என வலியுறுத்தியிருந்தேன். இப்போது விவசாயிகள் போராட்டத்தால் சில கிராமங்களை கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாற்றியுள்ளன.
போராட்ட களங்களை கடந்து செல்லும் போதும், திரும்பி கிராமங்களுக்கு வரும் போதும் குறிப்பிட்ட கிராம மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மீண்டும் விவசாயிகளிடம் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டியதே நம் அனைவரின் கடமை. மனித உயிருக்கு மிஞ்சியது எதுவும் கிடையாது.” என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் முதல் டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,286 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,041 பேர் குணமடைந்துள்ளனர். 163 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 6,238 ஆக அதிகரித்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மே 17ம் தேதி வரை ஹரியானாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவா மருத்துவமனையில் விபரீதம்: 4 நாட்களில் 74 பேர் பலி!
ஹரியானாவில் சமீப நாட்களில் ஊரக பகுதிகளில் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்துவதற்கு ஹரியானா சுகாதாரத்துறையினர் தயார் செய்து வருகின்றனர் என்று முதல்வர் கட்டார் கூறினார்.
மேலும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 50 வயதிற்கு மேற்பட்ட நபர் கொரோனாவால் உயிரிழக்க நேரிட்டால் அவரின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் சார்பில் 2 லட்ச ரூபாய் இன்ஸூரன்ஸ் தரப்படும் என முதல்வர் கட்டார் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: COVID-19 Second Wave, Farm laws, Farmers Protest, Haryana, Manohar Lal Khattar