HOME»NEWS»NATIONAL»farmers protest apex court order skd

வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைத்த குழுவை மாற்றுவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைத்த குழுவை மாற்றியமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைத்த குழுவை மாற்றுவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி விவசாயிகள் போராட்டம்
  • Share this:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி மாநில எல்லைகளில் விவசாயிகள 8 வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காணும் விதமாக வேளாண் சட்டங்களை ஆராய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்கக் கோரி விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் அமைத்த குழுவால் இறுதி முடிவு எடுக்க முடியாது என்றும் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து மட்டும் அறிக்கையளிக்கும் எனக் குறுப்பிட்டனர்.

சட்டங்களுக்கு ஆதவாக பொது வெளியில் பேசினாலே குழு உறுப்பினர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவார்கள் என்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் அமைத்த குழுவை மாற்றியமைக்குமாறு விவசாயிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு தடை கோரி மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் டிராக்டர் பேரணியை அனுமதிப்பதில் முடிவெடுக்க வேண்டியது டெல்லி போலீசார் தான் என்பதால், இதுதொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது என கூறினர். மேலும், டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை திரும்பப் பெறும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.



இந்நிலையில், விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையேயான 10-வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும், தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் முறையிடுமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: