புதிய வேளாண் சட்டங்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் தொடர்பு இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவசாயிகளை சில சக்திகள் தூண்டிவிட்டு, மத்திய அரசை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நியூஸ் 18 குழுமத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பிரதிநிதிகள் தங்களின் பிரச்னைகளை தெளிவாக குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவதில் காண்டிராக்ட் ஃபார்மிங் எனப்படும் ஒப்பந்தப் பண்ணையம் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதாகவும் மத்திய அரசு அதை சட்டமாகக் கொண்டு வந்தால் மட்டும் அதை எதிர்ப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
பேச்சுவார்த்தை நடைபெறும் போதே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், விவசாயிகளுக்கு மத்திய அரசு எழுத்து மூலமும் பதில் அளித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
மேலும், வேளாண் சட்ட போராட்டம் மூலம், மத்திய அரசை கவிழ்க்கும் நோக்கில், சில சக்திகள் விவாசாயிகளை தூண்டிவிடுவதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார் விவசாயிகள் போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவிட்டதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனரே தவிர, அவர்களுக்கு உறுதியான திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் நிர்மலா கூறினார். மேலும், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பேச்சுவாத்தை மூலம் உரிய தீர்வு காண மத்திய அரசு எப்போதும் தயாராகவே உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்