• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 'அரசின் ஆணவத்தை விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது' : ராகுல் காந்தி

'அரசின் ஆணவத்தை விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது' : ராகுல் காந்தி

விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று மோடி கூறியுள்ளார்

  • Share this:
    மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்யபட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள நிலையில் அரசின் ஆணவத்தை அறப்போராட்டம் வென்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் கைவிடப்படும் என்ற மிகப்பெரும் தகவலை வெளியிட்டு நாட்டையே மோடி பரபரக்க செய்துள்ளார்.

    விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம் எனவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், மோடியை விமர்சித்து எதிர்க்கட்சிகள் கருத்துக் கூறி வருகின்றன.

    இந்த சட்டங்களை தொடக்கம் முதலே எதிர்த்து வந்த ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், இந்திய விவசாயிகள் தங்களது அறவழி போராட்டத்தால். ஆணவத்தை அழித்துள்ளார்கள். விவசாயிகள் வாழ்க என்று கூறியுள்ளார்.

    மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், 'வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை மத்திய பாஜக அரசு கொடுமை செய்தது. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஓய்வின்றி போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். போராட்டத்தின்போது உயிரை தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!

    மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்! என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Musthak
    First published: