மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 9 மாதங்களைக் கடந்து நடைபெற்றுவருகிறது. இருப்பினும், போராட்டத்தின் வீரியம் குறையவில்லை. அதேநேரத்தில் விவசாயிகளின் கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தன் ஓராண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் அழைப்புவிடுத்தது.
நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் மூடுவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மருத்துவமனைகள், மருத்துவக் கடைகள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தனிப்பட்ட அவசரநிலைகளில் கலந்து கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட அனைத்து அவசரகால நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். தன்னார்வ மற்றும் அமைதியான முறையில் பந்த் அமல்படுத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் உறுதியளித்துள்ளது.
விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பஞ்சாப் மாநில முதல்வர் சரண்சிங் சன்னி முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார். பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநில அரசுகளும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் ஆர்பாட்டத்தில் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளது. அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.