ஹரியானா விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்: திகைத் போன்றவர்கள் சுயநலமிகள்: முதல்வர் மனோகர் லால் தாக்கு

ஹரியாணா முதல்வர்.

சாதுனியாக இருந்தாலும், திகைத்தாக இருந்தாலும் அவர்கள் செய்வது எதுவும் விவசாயிகள் நலன்களுக்கானது அல்ல. தங்கள் ஏர்முனையைக் கூராக்கிக் கொள்ள விவசாயிகளைப் பயன்படுத்துகின்றனர்.

 • Share this:
  ஹரியானா விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று கூறும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், குர்னாம் சிங் சாதுனி ஆகியோர் தங்கள் சுயநலன்களுக்காக விவசாயிகளைப் பயன்படுத்துகின்றனர் என்று சாடினார்.

  ஜனவரி 26ம் தேதி டிராக்டர் வன்முறைக்குப் பிறகே விவசாயப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது, ஆனால் பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், சாதுனி போன்றவர்கள் போராட்டத்தை மீட்டெடுத்தனர். மேலும் ஹரியாணாவில் இவர்கள் இருவரும் விவசாயிகளுக்கான பெரும் பஞ்சாயத்துக்களைக் கூட்டி பேசினர்.

  இந்நிலையில் கட்டார் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் 3 விவசாயச் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்காகத்தான், ஆனால் சில அதிருப்தித் தலைவர்கள் வேறு நோக்கங்களுக்காக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

  சாதுனியாக இருந்தாலும், திகைத்தாக இருந்தாலும் அவர்கள் செய்வது எதுவும் விவசாயிகள் நலன்களுக்கானது அல்ல. தங்கள் ஏர்முனையைக் கூராக்கிக் கொள்ள விவசாயிகளைப் பயன்படுத்துகின்றனர்.

  விவசாயிகளுக்கு ஹரியானா அரசு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. நிறைய திட்டங்களை அவர்களுக்காக உருவாக்கியுள்ளோம். விளைபொருட்களை வாங்குவதிலும் எந்த ஒரு சிக்கலும் இல்லை.

  ஹரியானாவில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தவறாக வழிநடத்தப்படுபவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராகவே இருக்கிறோம்.

  விவசாயச் சட்டங்களில் வேறு ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் அதையும் அரசு செய்யும்” என்றார் ஹரியாணா முதல்வர்.

  நவம்பர் மாத பிற்பகுதியிலிருந்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைகளை இந்த விவசாயச்சட்டங்கள் பறித்து விடும் என்று இவர்கள் போராடி வருகின்றனர்.

  சாயிநாத் போன்ற சிந்தனையாளர்கள் கூறுவதென்னவெனில், இந்தச் சட்டங்கள் அமல் படுத்தப்பட்டால் எதுவும் சிக்கல், முரண்பாடு, தகராறு எழுந்தால் விவசாயிகள் தரப்பில் வழக்குக் கூட தொடுக்க முடியாது என்கின்றனர்.

  மேலும் சிலவிமர்சகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த பட்ச ஆதரவு விலையை காலி செய்து விடுவார்கள் என்றும் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களுக்கு லாபம் தரும் பயிர்களை வளர்க்கக் கோருவார்கள் இதனால் இந்தியாவின் உணவுப்பாதுகாப்புக் காலியாகி விடும் என்று கூறுகின்றனர், இந்நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஹரியாணா முதல்வர் கட்டார் கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: