27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் - விவசாயிகள் மாநாட்டில் அறிவிப்பு

விவசாயிகள்

உயிரே போனாலும் 3 வேளாண்சட்டங்களையும் திரும்ப பெறும் வரை போராட்டக் களத்தை விட்டு வெளியேற மாட்டோம்.

 • Share this:
  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 40 விவசாய சங்கங்கள் இணைந்து நடத்திய ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முகாமிட்டு கடந்த 9 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், 40 விவசாய சங்கங்கள் இணைந்த ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ என்ற அமைப்பின் சார்பில் ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

  உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் இந்த மாநாடு நேற்று நடைபெற்றது. உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 300 விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அவர்கள் பேருந்துகள், கார்கள் மற்றும் டிராக்டர்களில் வந்து சேர்ந்தனர். கையில் கொடி, தலையில் பல வண்ண தொப்பியுடன் வந்தனர்.

  இந்நிலையில், பாரதீய கிசான் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், மாநாட்டில் பேசுகையில், நாடு விற்பனை செய்யப்படுவதை நாம் தடுக்க வேண்டும். விவசாயிகள் காக்கப்பட வேண்டும், நாடு காக்கப்பட வேண்டும், வர்த்தகம், தொழிலாளர்கள், இளைஞர்கள் காக்கப்பட வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம். இதுபோன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றார். மாநாட்டில் பேசியவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசையும், யோகி ஆதித்யநாத் அரசையும் விமர்சித்து பேசினர். அப்போது, வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

  இந்நிலையில், வருகிற 27ஆம் தேதி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர். இந்த மாநாட்டிற்காக 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டது. மேலும், மாநாட்டிற்கு வந்தவர்களுக்காக 500 உணவு கடைகளும், நடமாடும் கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரம் மருத்துவ குழுக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.

  மாநாட்டுக்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அங்கே பாதுகாப்புக்காக 5 ஆயிரம் தன்னார்வ தொண்டர்களை விவசாய சங்கங்கள் நியமித்து இருந்தன. மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவ ராஷ்டிரீய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி அனுமதி கோரியிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சிங் அனுமதி மறுத்து விட்டார்.

  Must Read : சாலைகள், பாலங்கள் நிரம்பின - உத்தரப் பிரதேசத்தில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள்

  இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத்தினர், தங்களின் உயிரே போனாலும் 3 வேளாண்சட்டங்களையும் திரும்ப பெறும் வரை போராட்டக்களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: