மத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தை 120 சதவீதம் தோல்வியடைந்து விட்டதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்பதாவது கட்டமாக, விவசாய சங்க பிரிதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஸ்கோயல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.
அப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.இதையடுத்து விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையிலும் விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர விவசாயிகள் யோசனை தெரிவித்தனர். ஆனால் இதற்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.