சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்த போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள், சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகரத்தின் எல்லைகளில் விவசாயிகள் குவியத் தொடங்கினர். அப்போது முதல் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து பல கிலோ மீட்டர் தூரம் அமர்ந்தும், கொட்டகைகளை அமைத்தும் போராடிவந்தனர். கடுமையான வெயில், குளிர், மழை என எவற்றையும் பொருட்படுத்தாமல் உறுதியாக தங்களது போராட்டத்தை நடத்தி வந்தனர்.
விவசாயிகள் காட்டிய ஒற்றுமை மற்றும் உறுதிக்கு கிடைத்த பலனாக கடந்த மாதம் 19- ஆம் தேதி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். எனினும் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்ட உத்தரவாதம், போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை ஆராய குழு அமைப்பதாகவும், அதில் விவசாயப் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஐக்கிய விவசாயிகள் இயக்க பிரதிநிதிகளை சேர்த்துக்கொள்வதாகவும் அரசாங்கம் அறிவித்தது. விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகவும் வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், தங்கள் இயக்கத்தை இடை நிறுத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்: பிட்காயின் குறித்து பதிவிட்ட ஹேக்கர்கள்
இதனைத் தொடர்ந்து டெல்லியின் சிங்கு எல்லையில் பாட்டு பாடி தங்களது சொந்த ஊர்களுக்கு திருப்பத் தொடங்கினர். முதலாவதாக திக்ரி, காசிபூர் எல்லைகளில் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை கலைத்த விவசாயிகள் டிராக்டர்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களில் அணி அணியாய் ஊர் திரும்பி வருகின்றனர்.
இதனால் குண்ட்லி-மானேசர்-பல்வால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை, தலைநகர் டெல்லியை ஆக்ரா மற்றும் அம்பாலா நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதாகும். போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தாலும் ஓராண்டில் பல்வேறு காரணங்களால் 700-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்பு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிக நீண்ட மக்கள் போராட்டம் என்று பலராலும் விவசாயிகளின் எழுச்சி வர்ணிக்கப்படுகிறது.
மேலும் படிங்க: இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farm laws, Farmers Protest Delhi