ஒன்றரை ஆண்டுகள் முகாமில் கழித்த பிறகு இந்தியர்கள்தான் என உறுதி: புத்தாண்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்த ரிக்‌ஷா ஓட்டுநர் குடும்பம்

அசாம் என்.ஆர்.சி. சரிபார்ப்பு. | கோப்புப் படம்.

“எங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை. என் குழந்தைகளுக்கு வயது 7, 5. எனவே நாங்கள் குழந்தைகளையும் முகாமுக்கு அழைத்துச் சென்றோம்.”

  • Last Updated :
  • Share this:
    அசாமில் சட்டவிரோத குடியேறிகள் என்று ஒன்றரை ஆண்டுகள் முகாமுக்கு அனுப்பப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியர்கள்தான் என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து புத்தாண்டில் குடியுரிமையும் உறுதி செய்யப்பட்டு விடுதலைக் காற்றையும் சுவாசித்தார்கள்.

    அயல்நாட்டினர் தீர்ப்பாயம் ஹுசைன் என்பவரது குடும்பத்தினரை இந்தியர்கள்தான் என்று மறு விசாரணையில் உறுதி செய்தது.

    ஹுசைன் என்ற இந்த ரிக்‌ஷா ஓட்டுநர் தங்களை மீண்டும் இந்தியர்கள்தான் என்று அங்கீகரித்தது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “பெருமைக்குரிய இந்தியர்கள் நாங்கள். நாங்கள் அசாமைச் சேர்ந்தவர்கள். எங்களைத் தவறாக வங்கதேசிகள் என்று நினைத்து சட்டவிரோதக் குடியேறிகள் என்று முத்திரைக் குத்தி முகாமுக்கு அனுப்பி விட்டனர். இது எப்படி சாத்தியம், நான் அசாமைச் சேர்ந்தவன்” என்றார்.

    ஹுசைன் குவஹாத்தியில் ரிக்‌ஷா ஓட்டுநர். அசாமின் உதல்குரி என்ற மாவட்டத்தின் லாடாங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஹுசைனின் தாத்த பாட்டி பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளது. தந்தை பெயரும் 1965 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இவரது மனைவி பேகமின் தந்தை பெயரும் 1951 என்.ஆர்.சியில் இருந்தது.

    ஆனால் இவையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் 2017-ல் ஹுசைன் தம்பதியினரின் குடியுரிமை மீது விசாரணை நடத்தியது போலீஸ். இருவரும் இந்திய குடிமக்கள் இல்லை, வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று முடிவு கட்டியது.

    ஹுசைன் வழக்கறிஞர் வைத்து வாதாடினார், ஆனால் அந்த வழக்கறிஞரோ எனக்கு கட்டணம் கட்ட உன்னால் முடியாது, நீ குவஹாட்டியிலிருந்து தலைமறைவாகி விடு இல்லையெனில் போலீஸ் கைது செய்யும் என்று கூறியுள்ளார்.

    ஆனால் ‘நான் ஏன் ஓட வேண்டும், என்ன தவறு செய்து விட்டேன்?’ என்று கேட்டார் ஹுசைன். மே 2018-ல் பேகம் அன்னியர் என்றும் 2019 மார்ச்சில் ஹுசைன் அன்னியர் என்றும் அயல்நாட்டினர் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. ஒருவரை அன்னியர் என்று முடிவு கட்டிவிட்டால் அவர்தான் தன்னை இந்தியர் என்று நிரூபிக்க வேண்டும் என்கிறது சட்டம்.

    ஜூன் 2019-ல் தம்பதியினர் கைது செய்யப்பட்டு கோல்பரா மாவட்ட முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    “எங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை. என் குழந்தைகளுக்கு வயது 7, 5. எனவே நாங்கள் குழந்தைகளையும் முகாமுக்கு அழைத்துச் சென்றோம்.” என்றார் பேகம். இவர்கள் சிறைமுகாமில் இருக்க இவரது உறவினர்கள் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவரிடம் முறையிட்டு வழக்கு மீண்டும் குஜராத் உயர் நீதிமன்றத்து க்கு வந்து வெளிநாட்டினர் தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்ய தள்ளப்பட்டதில் தற்போது புத்தாண்டில் ஹுசைன் தம்பதியினருக்கு விடுதலை கிடைத்ததோடு இந்தியக் குடிமக்கள் என்ற அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: