ஆபரேசன் செய்து கைவிரல் ரேகைகளை மாற்றி போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் சிக்கியுள்ளது. விரல் ரேகைகளில் ஆபரேசன் செய்து, ஒரு நபரின் அடையாளத்தை மாற்றி பல கோடி ரூபாய் சுருட்டிய 4 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற சிலர் விசா காலாவதியான பின்னரும் அங்கு தங்கியிருந்துள்ளனர். அவர்களை குவைத் அதிகாரிகள் கண்டுபிடித்து இந்தியாவிற்கு நாடு கடத்தியுள்ளனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீண்டும் குவைத் நாட்டிற்கு வேலைக்கு செல்ல அந்நாடு அனுமதிக்காது.
ஆனால் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட சிலர் மீண்டும் அந்நாட்டிற்கு வேலைக்கு சென்றிருப்தை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தங்களது அடையாளத்தை மாற்றி, போலியான பாஸ்போர்ட் மூலம் வந்திருப்பதாகவும் ஐதராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் வெங்கட்ரமணா, ரேடியாலஜிஸ்ட் நாகமுன்நேஸ்வரர், சிவசங்கர், கிருஷ்ணா ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் அந்நாட்டுக்கு செல்ல விரும்புபவர்களின் அடையாளத்தை இவர்கள் மாற்றியுள்ளனர். இதற்காக முதலில் கைவிரல்களில் இருக்கும் ரேகைகளை ஆபரேசன் மூலம் அகற்றி விடுகின்றனர்.
விரல்களில் ரேகைகள் உள்ள தோல் அடுக்கு வெட்டப்பட்டு அந்த திசுக்கள் அகற்றப்படுகின்றன. அதன் பின்னர் உள்ளங்கை தோல் வெட்டப்பட்ட இடத்தில் தையல் போடுகின்றனர். தையல் போட்ட இடத்தில் ஓரிரு மாதங்களுக்குள் புதிய கைரேகை சிறிய மாற்றங்களுடன் ஏற்படும்.
இதையும் படிங்க: மழையால் ரூ.225 கோடி இழப்பு.. கவலையில் பெங்களூரு ஐடி நிறுவனங்கள் - இழப்பு குறித்து விவாதிப்பதாக முதல்வர் உறுதி
இந்த புதிய கைரேகைகள் ஒரு ஆண்டிற்கு அப்படியே இருக்கும். அதன்பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இந்த ஒரு ஆண்டு காலத்திற்குள் இவர்கள் புதிய ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாள அட்டைகளை புதிய கைரேகையை பயன்படுத்தி பெறுகின்றனர். இவ்வாறு புதிய பாஸ்போர்ட்டுடன் இவர்கள் மீண்டும் புதிய நபர்களாக குவைத்துக்கு செல்கின்றனர்.
நீண்ட நாட்களாக இந்த மோசடி நடத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான், கேரளா உட்பட பல மாநிலங்களுக்கும் இந்த கும்பல் நேரடியாக சென்று அறுவை சிகிச்சை செய்து பலரது அடையாளங்களை மாற்றியுள்ளனர். ஒரு அறுவை சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலித்து பல கோடி ரூபாய் சுருட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், அறுவை சிகிச்சை கருவிகள், கையுறைகள், மருந்துகள், ஆன்டிபயாடிக் மாத்திரைகள், ஹைட்ரோகுளோரைடு ஜெல், ஊசி மருந்துகள், சோடியம் குளோரைடு கரைசல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தேடி வருவதாக காவல் ஆணையர் மகேஷ் பகவத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.